கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.
ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலை முதலே கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டன.
ஓசூர், கெலமங்கலம், தளி, தேன்கனிக்கோட்டை, பாகலூர் உள்ளிட்ட இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. கனமழையால் பகலிலே வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டவாறே சென்றன.
ஓசூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது பெய்த மழையால் அங்கு குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
இதேபோல் திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான பாலகிருஷ்ணாபுரம், வேடப்பட்டிசெட்டி, நாயக்கன்பட்டி, பேகம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.
தேனி மாவட்டம் கடமலைகுண்டு, அய்யனார்புரம், பாலூத்து, துரைசாமிபுரத்தில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் அய்யனார்புரம் பகுதியிலுள்ள கரட்டு ஓடையில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதேபோல் மதுரை மாவட்டம் வாடிபட்டி, சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. அப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது பெய்த மழையால், அங்கு குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.