டென்மார்க்கில் நடந்த கூட்டத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பிழையைச் சுட்டிக்காட்டி, ஐரோப்பிய தலைவர்கள் நக்கலாக பேசிச் சிரித்த நிகழ்வு பேசு பொருளாகியுள்ளது. அப்படி என்ன பேசிவிட்டார் டிரம்ப். பார்க்கலாம் விரிவாக.
சோவியத் யூனியன் உடைந்தபோது, ஆர்மேனியாவும், அஜர்பைஜானும் தனிக்குடியரசு நாடுகளாக மாறின. இருநாடுகளுக்கு இடையே எல்லையை வரையறுக்கும் 4400 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட நார்கோனா-காராபாக் மலைப்பகுதி யாருக்கு சொந்தம் என்பதில் பல ஆண்டுகளாகச் சர்ச்சை நீடித்தது. 1988ம் ஆண்டு தொடங்கி 6 ஆண்டுகளாக நடந்த போரில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழக்க நேரிட்டது.
1994ம் ஆண்டுப் போர் முடிவுக்கு வந்தபோது, அஜர்பைஜனானின் அங்கீகரிக்கப்பட்ட பகுதியாக மாறியது நாகோர்னா – காராபாக் பகுதி. 2016ம் ஆண்டு மீண்டும் பிரச்னை வெடிக்க, 2020ம் ஆண்டு மீண்டும் போர் மேகம் சூழ்ந்தது.
இப்போரை ரஷ்யா தலையிட்டுத் தீர்த்து வைத்தது. எனினும் அவ்வப்போது போர் வெடிப்பதும், பின்னர் சாந்தமாவதும் இங்கு வாடிக்கையாகவே மாறியது. அண்மையில் ஆர்மேனியா – அஜர்பைஜான் நாடுகளுக்கு இடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலையிட இருநாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன் காரணமாக 35 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த சர்ச்சை முடிவுக்கு வந்தது. அண்மையில் பிரிட்டன் சென்றிருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உடன் செய்தியாளர்களை சந்தித்தார். ஆர்மேனியா – அஜர்பைஜான் இடையேயான பல ஆண்டுகளாக நீடித்த போரை நிறுத்தியதாக் கூறிய டிரம்ப், ஆர்மேனியாவை அல்பேனியா என்று தவறாக உச்சரித்தார்.
அதே போன்று அஜர்பைஜானை, அபர்-பைஜான் என்றும் மாறி மாறி உச்சரித்திருந்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் இந்தப் பிழையை நக்கலாகச் சுட்டிக்காட்டி ஐரோப்பிய தலைவர்கள் சிரித்துக் கொண்டது பேசு பொருளாகியுள்ளது.
டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் நடந்த உச்சிமாநாட்டில்தான் இந்தச் சம்பவம் நடந்தது. அல்பேனியாவின் பிரதமர் எடி ராமா, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானையும், அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேயையும் அழைத்து டிரம்ப் பேசியதை குறிப்பிட்டு கிண்டல் செய்ததை கேட்க முடிந்தது.
“நீங்கள் எங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். ஏனெனில் அதிபர் டிரம்ப் அல்பேனியாவிற்கும் அஜர்பைஜானுக்கும் இடையில் செய்து கொண்ட சமாதான ஒப்பந்தத்திற்கு நீங்கள் எங்களை வாழ்த்தவில்லை” என்று எடி ராமா மேக்ரோனிடம் கூறியபோது, அலியேவ் சத்தமாகச் சிரித்தார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக, “அதற்காக நான் வருந்துகிறேன்” எனக்கூறி, மேக்ரான் மன்னிப்பு கேட்டது அந்த உரையாடலைக் கலகலப்பாக்கியது.
அஜர்பைஜானுடன் தான் செய்த சமாதான ஒப்பந்தம் பற்றிப் பேசும்போது, ஆர்மேனியாவை அல்பேனியாவுடன் பலமுறை குழப்பிய டிரம்ப்பை, எடி ராமா கடுமையாகச் சாடியுள்ளார். கடந்த மாதம் இதேபோன்ற ஒரு அறிக்கையில் டிரம்ப், அஜர்பைஜான் மற்றும் அல்பேனியா இடையே பல ஆண்டுகளாக நடந்து வந்த தீர்க்க முடியாத போரை முடிவுக்குக் கொண்டு வந்ததாகத் தவறாகக் கூறியிருந்தார்.
அதுமட்டுமின்றி, கம்போடியாவிற்கும் ஆர்மேனியாவிற்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டு வந்ததாகக் டிரம்ப் கூறியிருந்தார். கிட்டத்தட்ட 7,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இரண்டு நாடுகள், அவற்றுக்கிடையே மோதல் வரலாறு இல்லாத நிலையில், டிரம்பின் குழப்பமான பேச்சு விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.