ஊனம் ஒரு தடையல்ல என்பதை மெய்ப்பிக்கும் வகையில், கடலில் 30 கிலோ மீட்டர் தூரம் நீந்தி சாதனை படைத்த 12 வயது சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
சென்னை முகப்பேரில் வசித்து வரும் பெரியார் செல்வன் – பத்மபிரியா தம்பதியின் 12 வயது மகனான புவி ஆற்றல், பிறவியிலேயே ஒரு கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஆவார்.
சிறுவயது முதலே நீச்சலில் ஆர்வம் கொண்டு மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை வென்றுள்ள மாற்றுத்திறனாளி சிறுவன், கடலில் நீந்தி சாதனை படைத்துள்ளார்.
ராமேஸ்வரத்தில் இருந்து படகு மூலம் இலங்கை சென்ற சிறுவன், அதிகாலை அங்கிருந்து தனது நீச்சல் பயணத்தைத் தொடங்கினார். சவால் நிறைந்த கடல் நீரோட்டங்களைத் திறம்பட சமாளித்து, இடைவிடாது நீந்தி சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்தை 9 மணி நேரம் 11 நிமிடங்களில் வெற்றிகரமாக கடந்து, தனுஷ்கோடியை வந்தடைந்தார்.
அப்போது, கடற்கரையில் திரண்டிருந்த பொதுமக்கள், அரசு அதிகாரிகள் மற்றும் நீச்சல் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் உற்சாகத்துடன் சிறுவனை வரவேற்று, பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.