பாகிஸ்தான் எல்லைகளில் ஏகே 630 வான் பாதுகாப்பு தளவாடத்தை நிலைநிறுத்த இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தித்தொகுப்பில்.
இஸ்ரேலின், ‘அயர்ன் டோம்’ போல், இந்தியாவின் வான்பரப்பை பாதுகாக்க, ‘சுதர்சன சக்ரா’ திட்டம் தயாராகி வருகிறது. உள்நாட்டிலேயே மிகுந்த கவனத்துடன், பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாக்கப்படும் இந்த வான் கவசம், 2035ல் முழு செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்ரேஷன் சிந்துார் நடவடிக்கையின் போது, ரஷ்யாவிடம் இருந்து பெறப்பட்ட எஸ் – 400 வான் கவசம் நமக்கு மிகவும் பாதுகாப்பாக இருந்தது. அதேசமயம், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘ஆகாஷ்தீர்’ கருவியும் எதிரிகளின் ஏவுகணைகளை பந்தாடின. எனினும், தற்போது உருவாக்கப்பட்டு வரும் சுதர்சன சக்ரா, ஆகாஷ்தீர் வான் பாதுகாப்பு கவசத்தைவிட பன்மடங்கு சக்தி வாய்ந்ததாக இருக்கும் என நம்பப்படுகிறது.
இந்நிலையில், சுதர்சன சக்ரா திட்டத்தின் ஒரு பகுதியாக, ஏகே 630 வான் பாதுகாப்பு தளவாடத்தை கொள்முதல் செய்ய மத்திய பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. Advanced Weapon and Equipment India Ltd நிறுவனத்திடம் இருந்து ஆறு ஏகே 630 தளவாடங்களை வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.
ராணுவ கனரக வாகனங்களிலோ, போர்க்கப்பல்களிலோ பொருத்தப்பட்டிருக்கும் ஏகே 630 வான் பாதுகாப்பு தளவாடம், எதிரி நாட்டு இலக்குகளை சுழன்று சுழன்று தாக்கி அழிக்கும் திறன் படைத்தது. 4 கிலோ மீட்டர் தொலைதூரத்திற்குள் பறக்கும் ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகளை துல்லியமாக தாக்கும் ஏகே 630, ஒரே நிமிடத்திற்கு மூவாயிரம் துப்பாக்கி குண்டுகளை தீப்பொறி பறக்க வெளியேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாதுகாப்புத்துறை அதிகாரிகள், பஹல்காம் தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக இருநாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போரில், இந்திய குடியிருப்புகள் மீது பாகிஸ்தான் குறிவைத்ததாகவும், இனிவரும் காலங்களில் அதற்கு முடிவு கட்டவே ஏகே 630-ஐ களமிறக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
பாகிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ள ஜம்மு-காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப், குஐராத் மாநிலங்களில் ஏகே 630 வான் பாதுகாப்பு தளவாடத்தை நிலைநிறுத்தி, எதிர்காலத்தில் பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் உறுதிப்பட தெரிவித்தனர்.
இதனிடையே இந்தியாவின் நடவடிக்கையால் தொடர்ச்சியாக அச்சத்தில் உள்ள பாகிஸ்தான், ஏகே 630 வான் பாதுகாப்பு தளவாடம் கொள்முதல் செய்யப்படும் செய்தி கேட்டு மேலும் அலற தொடங்கியுள்ளது. இனி ஒருமுறை வாலாட்டினாலும் பாகிஸ்தான் கதையை முடித்து விடுவோம் என கங்கணம் கட்டி செயல்படும் பாஜக அரசு, அதற்கான ராணுவ கட்டமைப்புகளை உருவாக்குவதிலும் தீவிரம் காட்டிவருகிறது.