மத்திய பிரதேசத்தில், கோல்ட்ரிப் இருமல் மருந்து குடித்து 10 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பூதாகரமான நிலையில், தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களும், தரமற்ற மருந்துக்குத் தடை விதித்துள்ளன. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்…
மத்திய பிரதேசம் மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் கோல்ட்ரிப் இருமல் மருந்து குடித்த 10 குழந்தைகள் சிறுநீரகம் செயலிழந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. குஐராத் மாநிலத்திலும் ஒரு குழந்தை உயிரை விட, இனியொரு சம்பவம் நடந்து விடக் கூடாது எனச் சுகாதாரத்துறை விசாரணையைத் தீவிரப்படுத்தியது.
பெரும்பாலான குழந்தைகள் 7 வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்ததால், இக்கொடூர சம்பவம் மக்களை கவலையில் ஆழ்த்தியது. குழந்தைகள் அனைவரும், கோல்ட்ரிப் எனும் இருமல் மருந்தைக் குடித்திருப்பது விசாரணையில் தெரியவர, உயிரை குடித்தது அந்த மருந்து தானா? என ஆராயப்பட்டது.
குழந்தைகளின் சிறுநீரக திசுவில் டை எத்திலின் கிளைக்கால் எனப்படும் கொடிய வேதிப்பொருள் இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதால், கோல்ட்ரிப் என்பது இருமல் மருந்து அல்ல, விஷ மருந்து என்பது திட்டவட்டமானது. இந்தச் சம்பவத்தில் மேலும் ஒரு அதிர்ச்சியூட்டும் தகவல் என்னவென்றால்.
கோல்ட்ரிப் மருந்து தமிழகத்தில் தயாரிக்கப்பட்டது தான். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்ச்சத்திரத்தில் இயங்கும் ஸ்ரீசென் பார்மா நிறுவனத்தில் கோல்ட்ரிப் தயாரிக்கப்பட்டது விசாரணையில் தெரியவர, அந்நிறுவனத்தில் இருந்து விநியோகிக்கப்பட்ட ஒட்டுமொத்த மருந்துகளுக்கும் மத்திய பிரதேச அரசு தடைவிதித்துள்ளது.
அதுமட்டுமல்ல, ஸ்ரீசென் பார்மா நிறுவனத்தின் மீது வழக்குப்பதிந்து உயிரிழந்த குழந்தைகளுக்கு நீதி கேட்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது மத்திய பிரதேச அரசு. மேலும் கோல்ட்ரிப் மருந்தை குழந்தைகளுக்குப் பரிந்துரைத்த மருத்துவரையும் அதிரடியாகக் கைது செய்திருக்கிறது.
பிஞ்சுக் குழந்தைகள் உயிரை விட்ட சம்பவம், நாடு முழுவதும் பூதாகரமான நிலையில், பல்வேறு மாநில அரசுகள் அலர்ட் ஆகி இருக்கின்றன. மத்திய பிரதேசத்தைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் கேரளம் ஆகிய மாநிலங்களும் கோல்ட்ரிப் மருந்துக்கு அதிரடியாகத் தடை விதித்துள்ளன.
மருந்தகங்களில் இருக்கும் கோல்ட்ரிப் ஸ்டாக் அனைத்தும் உடனடியாக அழிக்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளன. இதனிடையே, சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருக்கும் குழந்தைகளுக்கு முடிந்த வரையில், சிரப் பயன்படுத்த வேண்டாம் என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பெரியவர்களின் சிறுநீரகம் முதிர்ச்சி அடைந்திருக்கும். ஆனால், குழந்தைகளுக்குச் சிறுநீரகம் முழுமையாக முதிர்ச்சி அடைந்திருக்காது என்பதால் மருத்துவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.