பணையக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பு ஒப்புக்கொண்டதை வரவேற்றுள்ள பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் காசா அமைதி ஒப்பந்த நடவடிக்கைகளுக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என்றும் உறுதி அளித்துள்ளார். அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த 2023 ஆம் ஆண்டு, அக்டோபர் 7 ஆம் தேதி, இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் அமைப்பினர் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்ரேல் மக்களைக் கொன்றனர். மேலும் 251 பேரை பணயக் கைதிகளாகக் காசாவுக்கு கடத்திச் சென்றனர்.
இதனையடுத்து, ஹமாஸ் மீது இஸ்ரேல் இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. ஹமாஸிடம் சிக்கியிருந்த பணயக் கைதிகளில் பலரை மீட்ட இஸ்ரேல், அனைத்து பணயக் கைதிகளையும் மீட்பதோடு,ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக அழிக்கும் வரை போர் நிறுத்தம் இல்லை என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உறுதியாக அறிவித்திருந்தார்.
இஸ்ரேல் இராணுவத்துக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடக்கும் போரால், மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்து வந்தது. இந்நிலையில், இஸ்ரேல்-காசா போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 21 அம்ச அமைதி ஒப்பந்த திட்டத்தை முன் வைத்தார்.
அமெரிக்காவின் அமைதி திட்டத்தை ஹமாஸ் ஏற்றுக் கொண்டு, ஆயுதங்களை வைத்துவிட்டு அமைதிக்கு திரும்ப வேண்டும் என்றும், இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையில் ஹமாஸ் பயங்கரவாதிகள் முழுமையாக அழிக்கப்படுவார்கள் என்றும் ஹமாஸை அழிப்பதற்கு இஸ்ரேலுக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கும் என்றும் ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.
மேலும் 72 மணி நேர காலக்கெடும் விதித்த ட்ரம்ப், இது ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கான ‘கடைசி வாய்ப்பு’ என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இஸ்ரேல் சிறையில் உள்ள ஹமாஸ் கைதிகளுக்கு ஈடாக உயிருடன் இருக்கும் இஸ்ரேல் பணயக்கைதிகளையும், இறந்த பணயக்கைதிகளின் உடல்களையும் ஒப்படைக்க ஹமாஸ் ஒப்புக் கொண்டுள்ளது. மேலும் ட்ரம்ப் அமைதி திட்டம் தொடர்பாகப் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
ட்ரம்பின் அமைதி திட்டத்துக்கு இஸ்ரேல் முழு ஒத்துழைப்பு வழங்கும் என அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ள நிலையில், விரைவில் காசாவில் அமைதி திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்மொழிந்துள்ள காசா அமைதி திட்டத்தை முழுமனதுடன் வரவேற்பதாகவும் ஆதரிப்பதாகவும் கூறிய பிரதமர் மோடி, காசாவில் அமைதி முயற்சிகள் தீர்க்கமான முன்னேற்றத்தை அடைந்து வரும் நிலையில், பணயக்கைதிகள் விடுதலைக்கு ஹமாஸ் ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்றும் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் நீடித்த மற்றும் நியாயமான அமைதியை ஏற்படுத்த அதிபர் ட்ரம்ப் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் எனத் தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியா மீது 50 சதவீத பரஸ்பர வரியை ட்ரம்ப் விதித்ததிலிருந்து, இருநாடுகளுக்கும் இடையே வர்த்தக அரசியல் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், மீண்டும் இருதரப்பு உறவு மேம்படுவதற்கான அறிகுறிகள் இப்போது தெரிய தொடங்கியுள்ளன.
முன்னதாகத் தனது 75 வது பிறந்தநாளில் அதிபர் ட்ரம்ப் தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டையும் வலியுறுத்தி இருந்தார்.
தொடர்ந்து, காசாவில் நீண்டகால அமைதிக்கான பாதையாக ட்ரம்பின் காசா அமைதித் திட்டத்தை வரவேற்ற பிரதமர் மோடியின் எக்ஸ் பதிவை அப்படியே தனது சமூக வலைத்தள பக்கத்தில் மறுபதிவு செய்திருந்தார் அதிபர் ட்ரம்ப். இது அமெரிக்க இந்திய உறவை மேம்படுத்தும் நல்ல அறிகுறி என்று புவிசார் அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.