கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் பாகிஸ்தானில் உள்ள தனது வணிக நிறுவனங்களை இழுத்து மூடியுள்ளன. பாகிஸ்தானில் உள்ள பொருளாதார மற்றும் அரசியல் சூழல் தொழில் மற்றும் வணிகம் செய்வதற்குச் சாதகமாக இல்லை என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள அமெரிக்க நிறுவனமான Procter & Gamble கடந்த வியாழக் கிழமை பாகிஸ்தானில் தனது உற்பத்தி மற்றும் வணிக நடவடிக்கைகளை முற்றிலுமாக நிறுத்தியுள்ளது. பாகிஸ்தானில், P&G குடையின் கீழ் Pampers, Ariel, Always, Safeguard, Head & Shoulders, Pantene, Olay மற்றும் Vicks உள்ளிட்ட பல பிராண்டுகள் சந்தையில் உள்ளன. இதற்கிடையில், P&G-ன் துணை நிறுவனமான Gillette Pakistan போன்ற நிறுவனங்களும் தங்கள் வணிகத்தை நிறுத்திக் கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ந்து சேவை செய்ய, மூன்றாம் தரப்பு விநியோகஸ்தர்களை நியமிக்க உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அசாத் அலி ஷா, P&G பாகிஸ்தானை விட்டு வெளியேறுவது முதலீட்டுச் சூழலுக்கான எச்சரிக்கை சிவப்புக் கொடி என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, எலி லில்லி, ஷெல், மைக்ரோசாப்ட், உபர் மற்றும் யமஹா உள்ளிட்ட பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் பாகிஸ்தானில் தங்கள் உற்பத்தி, விநியோகம் உள்ளிட்ட அனைத்து வணிக நடவடிக்கைகளையும் நிறுத்தியுள்ளன.
முப்பது வெவ்வேறு நிறுவன வரிகள், மின்சார நெருக்கடிகள், பாதுகாப்பு அபாயங்கள், உள்கட்டமைப்பு பிரச்சனைகள் மற்றும் பலவீனமான ரூபாய் மதிப்பு போன்ற காரணங்களால் பன்னாட்டு நிறுவனங்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேறுகின்றன. வருமானத்துக்கு வழியில்லாத நிலையில், மீள முடியாத வறுமையில் சிக்கிய ஒருவர், இறுதியாக வந்தவரைக்கும் லாபம் எனத் தனது நிலத்தை விற்பது போல, பாகிஸ்தான் தனது நாட்டின் நிலப் பரப்பை விற்க தொடங்கியுள்ளது.
இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது தனக்கு உதவிய துருக்கிக்கு இலவசமாகக் கராச்சி தொழிற்பூங்காவில் சுமார் 1000 ஏக்கர்நிலத்தைப் பாகிஸ்தான் தாரை வார்த்துள்ளது. ஏற்கெனவே, பலூசிஸ்தானின் குவாதர் துறைமுகம் உட்பட 2,000 ஏக்கர் நிலத்தைச் சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தட ஒப்பந்தத்தின் கீழ் மிக நீண்ட கால குத்தகைக்குப் பாகிஸ்தான் சீனாவுக்குக் கொடுத்துள்ளது.
இந்நிலையில், தம்மை ஒரு சிறந்த வியாபாரி மற்றும் ரியல் எஸ்டேட் ஜாம்பவான் என்று கூறிக் கொள்ளும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மொத்த பாகிஸ்தான் நிலத்தையும் கைப்பற்றியுள்ளார். இதற்காக, அமெரிக்காவின் U.S. Strategic Metals நிறுவனம் மற்றும் பாகிஸ்தான் Frontier Works Organization (FWO) இடையே கையெழுத்தாகி உள்ளது.
இந்த ஒப்பந்தப்படி அமெரிக்க நிறுவனம் பாகிஸ்தானில் 500 மில்லியன் டாலர் முதலீடு செய்யும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே பாகிஸ்தானில் 45 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் வறுமையில் உள்ளதாக உலக வங்கியின் அறிக்கை தெரிவித்துள்ளது. இதில் 16.5 சதவீதத்துக்கும் அதிகமான பேர் தீவிர வறுமையில் உள்ளனர்.
சுமார் 10 கோடி மக்களுக்கும் மேல் ஒரு நாளைக்கு 250 ரூபாய் கூடச் சம்பாதிக்க முடியாத நிலையில் தவிக்கின்றனர். சொல்லப்போனால், நாட்டின் மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேல் வறுமையில் உள்ளனர். இது இந்தியாவில் இருந்து பிரிந்து இஸ்லாமிய நாடாக உருவானதில் இருந்து அடுத்தடுத்து வந்த பாகிஸ்தான் அரசுகளின் தோல்வியையே காட்டுகிறது.
இது ஒருபுறம் என்றால், பாகிஸ்தானின் கடன் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தில் இருப்பதாகப் பாகிஸ்தானின் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. உள்நாட்டுக் கடன் 51 பில்லியனும் வெளிநாட்டுக் கடன் 24 பில்லியனும் எனப் பாகிஸ்தானின் மொத்த பொதுக் கடன் 76 டிரில்லியனை எட்டியுள்ளது.
இது கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் மொத்த கடன் 5 மடங்கு அதிகரித்துள்ளது. உள்ளூர் மக்கள் வறுமையில் தவிக்கும் நிலையில் சொந்த நாட்டில் கனிம வளங்கள் நிறைந்துள்ள பலுசிஸ்தானை அமெரிக்காவிடம் அடகு வைத்துள்ளது பாகிஸ்தான்.
கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக மற்ற நாடுகளிடம் பிச்சை எடுக்க அலைந்து கொண்டிருக்கிறோம் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வெட்கத்தை விட்டுச் சொல்லியிருந்தார். எப்போதுமே பாகிஸ்தான் சிறந்த சந்தையாக இருந்ததில்லை.
எனவே முதலீடுகளை ஈர்க்க முடியாத பாகிஸ்தான் அரசு, விற்பதற்கு எதுவும் இல்லாத நிலையில், நாட்டின் இறையாண்மையான நிலப் பரப்பையே விற்க தொடங்கியுள்ளது. ஒருவருக்கு வீடு இல்லையென்றால் நாடு உண்டு. நாடே இல்லை என்றால் எதுவும் இல்லை. தாய் மண்ணை விற்கும் பாகிஸ்தான் அரசு சொந்த மக்களுக்கு என்ன மிச்சம் வைக்கப் போகிறது ? என்பது விடை தெரியாத கேள்வியாக உள்ளது.