பாகிஸ்தானின் வெளிநாட்டு வர்த்தக புள்ளிவிவரங்கள் சர்வதேச நாணய நிதியத்தால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இது பாகிஸ்தானின் நம்பகத் தன்மையைச் சர்வதேச அளவில் கேள்விக்குறியாகி உள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
சராசரியாக ஒவ்வொரு இரண்டரை ஆண்டுகளுக்கும் ஒரு ஒப்பந்தம் என்ற அளவில், 25 முறைக்கும் மேல் 1958 முதல் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பாகிஸ்தான் கடன் பெற்றுள்ளது. இது அந்நாட்டின் பொருளாதாரத்தின் பலவீனத்தைக் குறிக்கிறது.
விரிவாக்கப்பட்ட நிதி வசதி மற்றும் மீள்தன்மை மற்றும் நிலைத்தன்மை வசதி என்ற இரண்டு IMF கடன் திட்டங்களில் இருந்து பாகிஸ்தான் கடன் வாங்கி உள்ளது. முதல் திட்டம் பாகிஸ்தானுக்கான 7 பில்லியன் டாலர் நிதியுதவி யாகும்.
இதில் இதுவரை சுமார் 2.1 பில்லியன் டாலர் வரை வழங்கப்பட்டுள்ளது. சுமார் 1.3 பில்லியன் மதிப்புள்ள இரண்டாவது கடன் திட்டம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின் பாகிஸ்தானுக்கு IMFயால் அங்கீகரிக்கப்பட்டது. அடுத்த கட்ட தவணை கடன் பெறும் நேரத்தில், பாகிஸ்தான் காட்டிய நிதிகணக்கில் முரண்பாடுகள் இருப்பதாகப் பகிரங்கமாக IMF தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 11 பில்லியன் டாலர் மதிப்புள்ள முரண்பாடுகளைப் பாகிஸ்தானின் தரவுகளில் இருப்பதை IMF கண்டுபிடித்துள்ளது. பாகிஸ்தான் வருவாய் ஆட்டோமேஷன் லிமிடெட் (PRAL) மற்றும் பாகிஸ்தான் ஒற்றை சாளரம் (PSW) ஆகிய இரண்டு வெவ்வேறு நிறுவனங்களால் 2023-2024 நிதியாண்டுக்கான இறக்குமதி தரவு கிட்டத்தட்ட 5.1 பில்லியன் டாலர் வித்தியாசத்தைக் கொண்டிருப்பதாகக் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி தரவுகளில் உள்ள வேறுபாடு, 5.7 பில்லியன் டாலராக அதிகரித்தது. பாகிஸ்தான் ஒற்றை சாளரத்தால் வழங்கப்பட்ட மொத்த இறக்குமதி மதிப்பு, ஸ்டேட் பாங்க் ஆஃப் பாகிஸ்தான் கணக்கீடுகளை விட அதிகமாக உள்ளது.
இந்தத் தரவுகள் நடப்புக் கணக்கு உபரியைக் கணக்கிடப் பயன்படுத்தப்பட்டதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்த முரண்பாடுகள் தரவு மூலங்களை பாகிஸ்தான் வருவாய் நிறுவனத்தில் இருந்து பாகிஸ்தான் ஒற்றை சாளரத்துக்கு மாற்றியதால் ஏற்பட்டது என்று பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் IMF-க்கு விளக்கியுள்ளனர். மேலும் சர்வதேச வர்த்தக மையத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்ட வர்த்தக தரவுகள் முழுமையானது அல்ல என்று பாகிஸ்தான் அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
பாகிஸ்தான் தனது தரவுகளில், தனது தகவலறிக்கையில் மிகவும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று IMF வலியுறுத்தியுள்ளது. மறுஆய்வுப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கு முன்பு பாகிஸ்தான் புள்ளிவிவர பணியகத்தை (PBS) IMF தொடர்பு கொண்டதாகவும், பின்னர் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்துடன் பேச்சவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாகப் பாகிஸ்தான் இறக்குமதியாளர்களுக்கும் சீன ஏற்றுமதியாளர்களுக்கும் இடையிலான வர்த்தகத் தரவுகளுக்கு இடையிலான குளறுபடிகளை விசாரிக்கத் தொடங்கியபோது இந்த முரண்பாடுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. பாகிஸ்தான் இறக்குமதியாளர்கள் அறிவித்த பொருட்களுக்கும் சீன ஏற்றுமதியாளர்கள் அறிவித்த பொருட்களுக்கும் இடையே ஒரு பெரிய வேறுபாடு இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது.
ஜவுளி இறக்குமதியில் 3 பில்லியன் டாலர் அளவுக்கான இறக்குமதிகளும் உலோகங்கள் இறக்குமதியில் இறக்குமதிகள் சுமார் 1 பில்லியன் டாலர் அளவுக்கான இறக்குமதிகளும் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களில் காட்டப்படவில்லை.
இதற்கிடையே கடந்த நிதியாண்டுகளில் இரண்டு அரசு நிறுவனங்கள் வழங்கிய வர்த்தக தரவுகளில் சுமார் 11 பில்லியன் மதிப்புள்ள முரண்பாடுகளை நிவர்த்தி செய்யுமாறு IMF, பாகிஸ்தானை எச்சரித்துள்ளது.