தூத்துக்குடி அருகே சாலை அமைக்காமல் காசோலையை மட்டும் திமுக அரசு சுருட்டியுள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.4.63 கோடியில் தூத்துக்குடி மாவட்டம் கீழ்நாட்டுக்குறிச்சி-தாப்பாத்தி இடையில் சாலை அமைக்காமல், ஜூலை மாதத்திலேயே சாலை அமைத்துவிட்டதாக விளம்பரப் பலகையை மட்டும் அமைத்துவிட்டுச் சென்றிருக்கிறது விளம்பர மாடல் அரசு என தெரிவித்துள்ளார்.
சாலையின்றித் தவிக்கும் கிராம மக்களுக்கு வரப்பிரசாதமாக மத்திய அரசு வழங்கிய திட்டத்தை செயல்படுத்தாமல், மக்களை வதைத்துவிட்டு, வழங்கிய நிதியை மட்டும் வாரி சுருட்டிக்கொள்வது தான் திராவிட மாடலா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்கள் வரிப்பணத்தை மோசடி செய்து தங்கள் சொந்த கஜானாவை நிரப்பிக்கொண்டு விளம்பரம் மட்டும் செய்துகொள்வதற்கு திமுகவினர் வெட்கித் தலைகுனிய வேண்டும். சாலை அமைக்காத அறிவாலய அரசை கண்டித்து தூத்துக்குடி மாவட்டத் தாமரை சொந்தங்கள் போராட்டம் நடத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
உடனடியாக ஒப்பந்ததாரர் எர்ஷாத்கான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சாலையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியறுத்தியுள்ளார்.
இல்லையெனில் தமிழக பாஜக சார்பாக மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.