சொந்த நாட்டைச் சேர்ந்த 4 லட்சம் பெண்களைப் பாகிஸ்தான் ராணுவம் பாலியல் வன்முறை செய்ததாக ஐநா சபையில் இந்தியா வெளிப்படையாகக் குற்றம் சாட்டியுள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பெண்கள் மற்றும் பாதுகாப்பு குறித்த விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய பாகிஸ்தான் தூதர் சைமா சலீம், காஷ்மீரில் பெண்கள் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்படுவதாக ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டுகளை வைத்தார்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக உரையாற்றிய ஐநா சபைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியான பர்வதனேனி ஹரிஷ், துரதிருஷ்டவசமாக ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவுக்கு எதிராகக் குறிப்பாக ஜம்மு காஷ்மீருக்கு எதிராகப் பாகிஸ்தான் முன் வைக்கும் பொய்யான குற்றச்சாட்டுக்களைக் கேட்க வேண்டிய கட்டாயத்தில் ஐநா சபை உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
பெண்களைப் பாதுகாப்பதில் இந்தியாவின் செயல்பாடு கலங்கமில்லாதது என்று கூறிய அவர், தன் சொந்த மக்களைக் குண்டுவீசி கொல்லும் பாகிஸ்தான் பாதுகாப்பு குறித்து பேசுவது வேடிக்கையானது என்றும் கூறியுள்ளார். கடந்த மாதம் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஒரே இரவில் நடந்த வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 30-க்கும் மேற்பட்டவர்களைப் பாகிஸ்தான் விமானப்படை கொன்றதைக் குறிப்பிட்டு, தவறான தகவல்களைச் சொல்வதன் மூலம் பாகிஸ்தான் உலகை திசைதிருப்ப மட்டுமே முயற்சி செய்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய பர்வதனேனி ஹரிஷ், 1971-ல் கிழக்கு பாகிஸ்தானில், பாகிஸ்தான் நடத்திய ஆபரேஷன் சர்ச்லைட் ராணுவ நடவடிக்கையின்போது 30 லட்சம் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்றும், சுமார் 4 லட்சம் பெண்களைக் கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்து பாகிஸ்தான் இராணுவம் கொன்று குவித்தது என்றும் தெரிவித்தார்.
இந்தத் திட்டமிட்ட இனப்படுகொலையை அனுமதித்த நாடு தான் பாகிஸ்தான் என்றும் பர்வதனேனி ஹரிஷ் குறிப்பிட்டுள்ளார். ஆபரேஷன் சர்ச்லைட் ராணுவ நடவடிக்கையின்போது அரங்கேறிய கொடூரங்களை எல்லாம் மேற்பார்வையிட்ட பாகிஸ்தானின் மோசமான இராணுவத் தளபதி ஜெனரல் டிக்கா கான் டார், பிறகு வங்காளத்தின் கசாப்புக்காரன்’ என்று அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது. இறுதியில் இந்திய இராணுவத்திடம் தோல்வியை ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் இராணுவம் டாக்காவில் நிபந்தனையின்றி சரணடைந்தது.
அதன்பிறகு கிழக்கு பாகிஸ்தான் வங்கதேசமாகச் சுதந்திரம் பெற்றது. சொந்த மக்களை இனப் படுகொலை செய்த பாகிஸ்தான் உண்மை முகத்தை சர்வதேச அரங்கில் கிழித்து தொங்கவிட்ட ஹரிஷ், உலக நாடுகள் பாகிஸ்தானின் பொய் பிரச்சாரத்தை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.