திமுக அரசு, 100% கிராம சாலைகள் அமைத்து விட்டோம் என்ற பொய்யைத் திரும்பத் திரும்பக் கூறி வருகிறது என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவிற்கு உட்பட்ட பலாம்பட்டு மலை ஊராட்சிக்குட்பட்ட கொலையம், அரசமரத்தூர், கோரணுர், தானிமரதூர், நெக்கினி, பட்டிகொல்லை ஆகிய மலைகிராமங்களில் இருந்து, தானியமரத்தூர் அரசுப் பள்ளியில், மாணவர்கள் பலாம்பட்டு மலைப்பாதைகளின் வழியாகவும், கானாறு வழியாகவும் நடந்து சென்று அங்குள்ள விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பாக காலாண்டு விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிக்கு செல்ல முற்படும்போது, கடந்த வாரம் பெய்த கன மழையால் நெக்கினி மலைகிராமத்தில் இருந்து அமிர்தி வழியாக செல்லும் ஆற்றில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், மதியம் வரை, சுமார் 7 மணி நேரம் மாணவர்கள் நடுக்காட்டில், ஆபத்தான நிலையில் காத்திருக்க நேரிட்டுள்ளது. ஆற்றைக் கடக்க முடியாது என்பதால், மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள்.
மேலும், பொதுமக்கள், அருகிலுள்ள முக்கியப் பகுதிகளுக்குச் செல்ல முடியாமலும், அவதிப்பட்டு வருகின்றனர். கிராம சாலைகள், சிறு பாலங்கள் அமைக்க, கடந்த ஆண்டு வரை, மத்திய அரசு, ₹5,886 கோடி நிதி வழங்கியுள்ளது.
தமிழகத்தின் பல மாவட்டங்களில், இன்னும் கிராமங்கள், மலைக் கிராமங்கள் சாலை வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றன. குறிப்பாக, வேலூர், திருவண்ணாமலை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில், மலைக் கிராம மக்கள், சாலை வசதி இல்லாமல், அவசர மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.
ஆனால், திமுக அரசு, 100% கிராம சாலைகள் அமைத்து விட்டோம் என்ற பொய்யைத் திரும்பத் திரும்பக் கூறி வருகிறது. இந்தச் செய்திகள் எல்லாம் பார்க்கும்போது, இப்படிப் பொய் கூற முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு உறுத்தவில்லையா? உடனடியாக இப்பகுதியில், சாலை அமைப்பதோடு சிறு மேம்பாலம் ஒன்றை அமைத்து, மலைவாழ் மக்கள், மழைக் காலங்களில் கூட தடங்கலின்றி தங்கள் தினசரி வாழ்க்கையைத் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, திமுக அரசை அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.