இந்தியா முழுவதும் பைரசி படங்களை இணையத்தில் சட்டவிரோதமாகப் பதிவேற்றி வந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவர் யார்? எப்படி கைதானார்? என்பது குறித்து இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு ஒரு படத்தை எடுத்து முடித்தவுடன் 2 கவலைகள் ஏற்படும். ஒன்று, இந்தப் படம் நன்றாக ஓட வேண்டும். மற்றொரு, இந்தப் படம் முதல் நாளிலேயே பைரசியில் வெளியாகிவிடக் கூடாது. அந்த அளவுக்குப் பைரசி இந்திய திரையுலகினரை கதிகலங்க செய்து வருகிறது.
புதிய படங்களை யார் இணையத்தில் பதிவேற்றுகிறார்கள்? அவர்கள் எங்கிருந்து செயல்படுகிறார்கள்? இந்த நெட்வொர்க்கில் யாரெல்லாம் உள்ளார்கள்? என்பது யாருக்கும் தெரியாது. அதுகுறித்து அனைத்து மாநில போலீசாரும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில்தான், பீகார் தலைநகர் பாட்னாவில் வைத்துப் பைரசி கும்பல் ஒன்றை ஹைதராபாத் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
பட்னாவில் குறிப்பிட்ட வீடொன்றில் சோதனை செய்த அவர்கள், அங்கிருந்த கணினிகள், சர்வர்கள், ஹேக்கிங் உபகரணங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். அத்துடன், இந்தியா முழுவதும் வெளியாகும் படங்களை இணையத்தில் வெளியிட்டு வந்த நபரையும் கைது செய்தனர். அவர் ஒரு இளைஞர். வெறும் 21 வயதேயான இளைஞர்.
அவரது பெயர் அஷ்வணி குமார் (Ashwani Kumar). காலேஜ் ட்ராப் அவுட்டான இவர், சம்மந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்களின் கணினிகளை ஹேக் செய்து, அங்குள்ள புதிய திரைப்படங்களை நகலெடுத்துள்ளார். படம் வெளியான சில மணிநேரங்களில் அவர் இணையத்தில் பதிவேற்றியுள்ளார். தமிழகத்தின் கரூரை சேர்ந்த சிரில் ராஜ் என்பவர் இவருக்கு உடந்தையாக இருந்தது கண்டுபிடி்க்கப்பட்டுள்ளது.
அவர் பிரான்சில் இருந்து செயல்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திப் படங்களை அப்லோடு செய்துகொடுத்துள்ளார். திரையரங்குகளில் ரகசிய கேரமராக்களை பொருத்தியும் புதிய திரைப்படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பல்வேறுதிரையரங்குகளுக்குத் தங்கள் ஆட்களை அனுப்பி அஷ்வணி குமார்படத்தைப் பதிவு செய்துள்ளார். தமிழகத்தில் அவ்வாறு படங்களை ரெக்கார்டு செய்த சுதாகரன் என்பவரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். மேலும், 1TamilBlasters, 5MoviezRulz, 1TamilMV போன்ற சட்டவிரோத வலைத்தளங்களும் முடக்கப்பட்டுள்ளன.
புஷ்பா 2, கேம் சேஞ்சர், குட் பேட் அக்லி உள்ளிட்ட பல படங்கள் வெளியான முதல் நாளே HD ப்ரிண்டில் இணையத்தில் வெளியானதற்கு அஷ்வணி குமாரின் கைவண்ணம்தான் காரணம். ஹிந்தி திரைப்படங்கள், பிராந்திய திரைப்படங்கள், பெரிய பட்ஜெட் திரைப்படங்கள், சிறிய பட்ஜெட் படங்கள் என்ற எந்தப் பாகுபாடுமின்றி அவர் அனைத்து படங்களை இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.
இதுவரை 135 படங்களை அவர் வெளியிட்டுள்ளதாகவும், ஒரு படத்திற்கு 70 ஆயிரம் ரூபாய் வரை பெற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த முறையில் கோடி கணக்கில் அவர் சம்பாதித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. சரி, ஹேக்கிங் செய்வதைஇந்தச் சிறு வயதில் எப்படிகற்றுக்கொண்டாயெனன கேட்டதற்கு, யூடியூப்பார்த்துக் கொண்டேன் என அஷ்வணி குமார்கூலாகப் பதிலளித்துள்ளார்.
அவரை போலீசார் எவ்வாறு கைது செய்ததார்கள் என்பதும் சுவாரஸ்யான ஒன்றுதான். ஹைதரபாத் சைபர் கிரைம் போலீசார் பைரசி படங்களை வாங்குபவர்களை போல நடித்து, அவரை தொடர்பு கொண்டுள்ளனர்.
அவர் கேட்ட பணத்தை, கிரிப்டோ கரன்சியாகயும் அவர்கள் அனுப்பி வைத்துள்ளனர். இதனை நம்பிய அஷ்வணி குமார் சற்று அசந்த நேரம் பார்த்து, போலீசார் நேரில் சென்று அவரை கொத்தாகத் தூக்கி விட்டார்கள்.
படங்கள் எப்படி திருடப்பட்டன, அவை எவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்டன என்பன உள்ளிட்ட விவரங்களை சிரஞ்சீவி, நானி, நாகார்ஜூனா உள்ளிட்ட திரைத்துறையினருக்கு போலீசார் விளக்கியுள்ளனர். கைதான இளைஞரிடம் தொடர்ந்து விசாரணையும் நடைபெற்று வருகிறது. பைரசி நெட்வொர்க்கை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுவிட்டார்.
ஆகவே, இனி பைரசி படங்களே வராதா என்றால், இல்லை என்பதுதான் பதில். ஏனெனில், இந்தியாவில் பைரசி படங்களைப் பதிவேற்றும் பல நெட்வொர்க்குகள் இயங்கி வருகின்றன. அவற்றைச் சேர்ந்த ஒரு அஷ்வணி குமாரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். மற்ற அஷ்வணி குமார்களும் கைது செய்யப்படும்போதுதான், இந்தப் பைரசி விவகாரம் ஒரு முடிவுக்கு வரும்.
















