சேலத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
சேலத்தில் கடந்த 3 நாட்களாக, மழையின் தாக்கம் குறைந்து பகல் நேரத்தில் வெயில் சுத்தரித்து வந்தது,
இந்நிலையில் இரவு 8 மணி முதல் கொண்டலாம்பட்டி சீலநாயக்கன்பட்டி பிரபாத் ஜங்ஷன் சூரமங்கலம் அம்மாபேட்டை பொன்னம்மாபேட்டை அஸ்தம்பட்டி உடையாபட்டி புதிய பழைய பஸ் ஸ்டாண்டுகள் நான்கு ஐந்து ரோடுகள் ஆகிய பகுதிகளில் சுமார 1 மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்தது.
இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதியை சந்தித்தனர்.
மேலும் சாக்கடை கால்வாய்களில் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டுள்ளதால் மழை நீருடன் சாக்கடை கழிவு நீரும் கலந்து சாலையில் ஓடுவதால் வாகன ஓட்டிகள் இன்னல்களை எதிர்கொண்டனர்.
இதேபோல் திருப்பூர் நகர் பகுதிகளான கரட்டாங்காடு, காமராஜர் சாலை, தென்னம்பாளையம், வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. திருப்பூரில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது பெய்த மழையால் அங்கு குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான வேங்கிக்கால், மல்லவாடி, நாயுடுமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது,
உதகை நகர பகுதிகளான தலைக்குந்தா, பைன் ஃபாரஸ்ட், சூட்டிங் ஸ்பாட் உள்ளிட்ட பகுதிகளில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. தற்போது பெய்த மழை காய்கறி விளைச்சலுக்கு பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.