மலைப்பிரதேசங்களில் வசிக்கும் பனிச்சிறுத்தைகள் அழிவின் விளிம்பில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதற்கான காரணம் என்ன? விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.
பெரிய பூனை இனங்களில் கடினமான சூழலில் வாழும் குணம் கொண்ட பனிச்சிறுத்தைகள், பொதுவாகவே கூச்ச சுவாபம் கொண்டவை. மனிதர்களால் கண்காணிக்க முடியாதபடி பனிச்சிறுத்தைகள் தங்கி இருக்கும் இடமும் , அதன் நடமாட்டம் உள்ள இடங்களும் புவியியல் சூழலில் ஆபத்து நிறைந்ததாக இருக்கின்றன. தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் அமைந்துள்ள மலைப் பிரதேசங்கள், பனிச்சிறுத்தைகளுக்கு உகந்ததாக இருப்பதால், அங்கு அதிகளவில் வாழ்ந்து வந்தன.
ஆனால் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் காலநிலை மாற்றம், அவற்றின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைத்துள்ளன. ஆப்கானிஸ்தான் முதல் திபெத் வரை 12 ஆசிய நாடுகளில் மொத்தம் 41 பனிச்சிறுத்தைகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் ஆராய்ச்சியாளர்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.
அனைத்து பெரிய பூனை இனங்களிலும், பனிச்சிறுத்தைகள் மிகக் குறைந்த மரபணு மாறுபாட்டைக் கொண்டிருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதிகளவிலான மரபணு மாறுபாட்டை எதிர்பார்த்த ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த முடிவு ஏமாற்றத்தை அளித்துள்ளன.
மரபணுக்கள் மிகவும் ஒத்திருக்கும் போது, சுற்றுச்சூழல் மாற்றத்திற்கு ஏற்ப மாறும் திறனை பனிச்சிறுத்தைகள் இழப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பனிச்சிறுத்தைகள் ஒத்த DNA ஐ பகிரும் போது, குளிர்தாங்குவதற்கான அகன்ற பாதங்கள் போன்ற அம்சங்களை இழப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.
பனிச்சிறுத்தைகள் மலைபிரதேசங்களின் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், அவை முழுமையாக அழிந்துவிட்டால் சமநிலை தவறும் அபாயம் ஏற்படும். இது இயற்கையை சீர்குலைக்கும். நிச்சயம் பேரழிவை ஏற்படுத்தும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.