நாட்டை கட்டியெழுப்புவதும், மேம்படுத்துவதும் அனைத்து குடிமக்களின் பொறுப்பு என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் உரையாற்றிய மோகன் பாகவத், போன்ஸ்லே குடும்பத்திற்கும், ஆர்.எஸ்.எஸ்-க்கும் இடையிலான பிணைப்பு, மன்னர் லட்சுமணராவ் போன்ஸ்லே மற்றும் டாக்டர் ஹெட்வேல் காலத்திலிருந்தே தொடங்குவதாகக் கூறினார்.
மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி அளித்த உத்வேகம் போன்ஸ்லே குடும்பத்தில் வேரூன்றியதாகக் குறிப்பிட்ட அவர், அதனால்தான் நாக்பூர் மண்ணிலிருந்து நமது சங்கம் பிறந்ததாக தெரிவித்தார்.
மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி, சுயராஜ்யத்தை அமைக்க போராடியது தனிப்பட்ட லாபத்திற்கு அல்ல என்றும், மாறாக கடவுள், மதம், தேசத்திற்கான நோக்கத்தைக் கொண்டது என்றும் தெரிவித்தார்.
சமூகத்தின் நன்மைக்காக மக்கள் எவ்வாறு தன்னலமின்றி போராடினார்கள் என்பதை கடந்த காலத்திலிருந்து, நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
நமது வரலாறு, இந்தியாவை அமைதி மற்றும் செழிப்பு நிறைந்த பூமியாக மாற்றும் அளவுக்கு சக்தி வாய்ந்தது என்று கூறிய அவர், இந்தியாவை கட்டியெழுப்புவது, நாட்டு மக்களின் பொறுப்பு என்றும் வலியுறுத்தினார்.