கரூரில் கணவனை இழந்த பெண்ணை ஏமாற்றி திமுக நிர்வாகி இடத்தை அபகரிக்க முயற்சிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கரூர் திருக்காம்புலியூர் பகுதியைச் சேர்ந்த ரேணுகா என்பவர், காம்ப்ளக்ஸ் கட்டி வாடகைக்கு விட்டு வருகிறார். அதே காம்ப்ளக்ஸில் டீக்கடை ஒன்றையும் அவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் அந்த இடத்தைச் சுப்பிரமணி என்பவர் போலி பத்திரம் தயாரித்து அபகரிக்க முயற்சிப்பதாக ரேணுகா குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், சுப்பிரமணி 30க்கும் மேற்பட்ட அடியாட்களுடன் வந்து தனது கடையை அடித்து நொறுக்கி சூறையாடியதாக ரேணுகா வேதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், புகாரை ஏற்க போலீசார் மறுப்பதாகக் குமுறிய அவர், மாறாகத் தங்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் காவல்துறை சுப்பிரமணிக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும் கூறியுள்ளார்.