மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 22 குழந்தைகளின் உயிரை பறித்த இருமல் மருந்தில் அழகு சாதன தயாரிப்புக்கான மூலப்பொருள் கலந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மூலப் பொருட்களை வாங்கும் போது அதனை ஆய்வு செய்யத் தவறியதும், தரமற்ற முறையில் இருமல் மருந்தைத் தயாரித்ததுமே குழந்தைகள் உயிரிழப்புக்குக் காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது
மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் கோல்ட்ரிப் இருமல் மருந்தை அருந்திய 22 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில் கோல்ட்ரிப் மருந்து காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே இயங்கி வரும் ஷ்ரேசன் எனும் தனியார் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்திலிருந்து வந்த காவல்துறையினர் தனியார் மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதனை கைது செய்து அம்மாநிலத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
தமிழகத்தில் எந்தவொரு மருந்து நிறுவனமாக இருந்தாலும் அதன் உற்பத்தியை தொடங்குவதற்கும், அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு தரச்சான்றிதழ் வழங்குவதற்கும் முழு பொறுப்பும் தமிழக அரசின் சுகாதாரத்துறைக்கு தான் இருக்கிறது. இந்தச் சம்பவத்திற்கும், சுகாதாரத்துறைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பது போலப் பேசிவந்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், பின்னாளில் தனது துறையின் அலட்சியத்தை உணர்ந்து குறிப்பிட்ட நிறுவனத்திற்கு நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
22 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தை சுகாதாரத்துறையும், தமிழக அரசு நிர்வாகமும் அலட்சியமாக எதிர்கொள்வதாக மத்திய பிரதேச மாநில அரசுக் குற்றம் சாட்டியுள்ளது. சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனத்தில் மருந்து கட்டுப்பாட்டுத்துறை நடத்திய ஆய்வில் சுமார் 300க்கும் அதிகமான விதிமீறல்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக கோல்ட்ரிப் மருந்தின் மூலப் பொருட்களை ஆய்வு செய்தபோது பல்வேறு அதிர்ச்சி தரக்கூடிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
புரோப்பிலின் கிளைக்கால் வேதிப்பொருளில் இரண்டு வகைகள் உள்ளன. ஒருவகை மருந்து தயாரிக்கவும், மற்றொருவகை அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. காய்ச்சல் மற்றும் இருமல் மருந்துகளை தயாரிக்கும் போது அதிலுள்ள வேதிப் பொருட்கள் எளிதில் கரைய புரோப்பிலின் கிளைக்கால் என்ற மூலப் பொருளைப் பயன்படுத்துவதும் வழக்கமான நடைமுறையில் உள்ளன.
புரோப்பிலின் கிளைக்கால் மூலப்பொருட்களை வாங்கும் போது, மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்ற விதிமுறைகள் இருக்கும் நிலையில், அவற்றை மேற்கொள்ள ஸ்ரீசன் நிறுவனம் தவறியிருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
அதன்படி ஸ்ரீசன் பார்மா நிறுவனம் தயாரித்த கோல்ட்ரிப் மருந்துக்கு அழகு சாதன பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் புரோப்பிலின் கிளைக்கால் மூலப் பொருட்கள் தான் பயன்படுத்தப்பட்டுள்ளன. மூலப் பொருட்களின் தன்மையை ஆராயாமலும், அதற்கான தயாரிப்புச் சான்றிதழை பெறாமலும் ஸ்ரீசன் நிறுவனம் அலட்சியமாகச் செயல்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
பெயிண்ட் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் புரோப்பிலின் கிளைக்காலில், டை எத்தலீன் கிளைக்கால் அதிகளவில் இருக்கும் என்பதால், அவை குழந்தைகளின் சீறுநீரகங்களை பாதிப்படையச் செய்து அவர்களின் உயிரைப் பறித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.