தங்கள் நாட்டுக்கு வரும் சீன விமானங்கள் ரஷ்ய வான்பரப்பை பயன்படுத்தக் கூடாது என அமெரிக்கா கட்டுப்பாடு விதித்ததற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாக ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அமெரிக்க விமான நிறுவனங்கள் ரஷ்ய வான்பரப்பை பயன்படுத்தக் கூடாது அந்நாட்டு அரசு உத்தரவிட்டது.
இதனால் அந்நிறுவனங்கள் மாற்றுப் பாதையைப் பயன்படுத்துதால் அதிக நேரம் மற்றும் எரிபொருள் இழப்பு ஏற்படுகிறது. இதனிடையே சீனாவில் இருந்து அமெரிக்கா செல்லும் விமானங்கள் மட்டும் போக்குவரத்துக்காக ரஷ்ய வான்பரப்பை பயன்படுத்தி வந்தன.
இதனால் குறைவான நேரம் மற்றும் எரிபொருளே பயன்படுத்தப்படுவதால் சீன விமான நிறுவனங்கள் பயனடைந்து வந்தன. இந்நிலையில், தங்கள் நாட்டுக்கு வரும் சீன விமானங்கள் ரஷ்ய வான்பரப்பை பயன்படுத்தக் கூடாது என அமெரிக்கா கட்டுப்பாடு விதித்தது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா, அமெரிக்காவின் நடவடிக்கைகள் சர்வதேச பயணம் மேற்கொள்ளும் மக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் எனக் கூறியுள்ளது.
மேலும், உலகெங்கிலும் உள்ள பிற நாடுகளை தண்டிப்பதை விட, அமெரிக்கா தனது சொந்தக் கொள்கையைக் கடுமையாக பார்க்க வேண்டிய நேரம் இது எனவும் சீனா விமர்சித்துள்ளது.