தேனியின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்.
தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. கம்பம், சின்னமனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் காவல் நிலையம் முன்பு உள்ள சாலையில் மழைநீர் கரைபுரண்டு ஓடியது.
மேலும், குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இதேபோல திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. பல்லடம் சாலை, அவிநாசி சாலை, தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் வாகனத்தை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
மேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது.ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் சாலையோர வியாபாரிகள் கடும் அவதியடைந்தனர்.