தமிழகத்தைப் படுகுழியில் தள்ளிய திமுக அரசின் கோர முகத்தை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டவே நடைபயணத்தை தொடங்க உள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசின் விளம்பர வியூகங்களை அசுர வேகத்தில் முறியடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக சூளுரைத்துள்ளார்.
திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை, வன்கொடுமை போன்ற கொடூரங்களால் பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு வாழ்கிறார்கள் எனவும்
வேலைக்குச் சென்ற கணவனும், படிக்கச் சென்ற பிள்ளையும் போதையில்லாமல் வீட்டிற்குத் திரும்புவார்களா என எத்தனையோ அம்மாக்கள் கவலையுடன் காத்துக் கிடப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் வாக்குறுதிகளை எப்போது நிறைவேற்றுவீர்கள் எனத் திமுகவிடம் கேட்டுக் கேட்டு மக்கள் சோர்ந்துவிட்டதாக கூறியுள்ள நயினார் நாகேந்திரன்,
போலி சமூகநீதி ஆட்சியில் பெருகிவரும் சாதிய மோதல்களால், தமிழகம் தன் பெருமையை இழந்து நிற்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
ஸ்டாலின் மாடல் என்ற போர்வையில் தமிழகத்தைப் படுகுழியில் தள்ளிய திமுகவின் கோர முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டவே நடைபயணத்தை தொடங்க உள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.
திமுகவின் திறனற்ற ஆட்சியால், தலைகுனிந்து இருக்கும் தமிழகத்தைத் தலை நிமிர வைப்போம் எனவும் திமுகவிற்கு முடிவு கட்டுவோம் எனவும் நயினார் நாகேந்திரன் சூளுரைத்துள்ளார்.