திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் வரும் 27-ம் தேதி நடைபெறுவதை ஒட்டி கடல் அரிப்பினால் சேதமடைந்த கடற்கரை பகுதிகளை சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா வரும் 22-ம் தேதி யாகசாலை பூஜையுடன் கோலாகலமாக தொடங்க உள்ளது.
தொடர்ந்து ஏழு நாட்கள் நடைபெறும் கந்த சஷ்டி திருவிழாவில் தமிழகம் மட்டுமன்றி கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களிலிருந்தும், லண்டன், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தரவுள்ளனர்.
இதனையொட்டி முன்னேற்பாட்டு பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. மேலும், கோயில் வளாகத்தில் பக்தர்கள் தங்குவதற்காக ஒரு லட்சம் சதுர அடி பரப்பில் 12 பெரிய கொட்டகைகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக கடல் அரிப்பினால் சேதமடைந்த கடற்கரையை சீர் செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெறுகிறது.