காசாவில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இறுதி கட்ட ஒப்பந்தம் எகிப்தில் இன்று கையெழுத்தாகிறது.
மேற்கு ஆசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே 2023ஆம் ஆண்டு அக்டோபரில் இருந்து கடுமையான போர் நடந்து வருகிறது.
இதில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், லட்சக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. அமைதி ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்க வேண்டும்; பிணை கைதிகளை விடுவிக்க வேண்டும் என, டிரம்ப் கெடு விதித்திருந்த நிலையில், கடந்த 10ஆம் தேதி தற்காலிக போர் நிறுத்தம் அமலானது.
இந்நிலையில், எகிப்தில் அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்யும் முக்கிய கூட்டம் நடைபெறவுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டத்தில், எகிப்து அதிபர் அப்தெல் பத்தா அல் – சிசி உட்பட 20க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு, பிரதமர் நரேந்திர மோடிக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, எகிப்து செல்லும்போது விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்று வருவதை கேள்விப்பட்டதாகத் தெரிவித்தார்.
போர்களைத் தீர்ப்பதிலும் சமாதானம் செய்வதிலும் தாம் சிறந்தவன் எனப் பெருமை பேசிய டிரம்ப், ஆப்கன்-பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்த முயற்சிப்பேன் எனக் கூறினார்.