மேற்கு வங்க மாநிலம், துர்காபூரில் 2-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தின் முழு பின்னணி குறித்து இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்…
ஒடிசா மாநிலம், ஜலேஷ்வர் பகுதியைச் சேர்ந்த 23 வயது மாணவி, மேற்கு வங்கத்தின் துர்காபூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
கடந்த 10-ம் தேதி இரவு மாணவி, தனது ஆண் நண்பருடன் உணவருந்த வெளியே சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது அவர்களை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் சிலர், ஆண் நண்பரை சரமாரியாக தாக்கித் துரத்தியுள்ளனர்.
தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒதுக்குப்புறமான இடத்திற்கு, வலுக்கட்டாயமாக மாணவியை தூக்கிச் சென்றவர்கள் அவரைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதில் படுகாயமடைந்த மாணவி அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், குற்றவாளிகளை விரைந்து கைது செய்யக்கோரி மருத்துவ மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர்.
அதனடிப்படையில் தீவிர விசாரணை நடத்திய போலீசார் வழக்கில் தொடர்புடைய அப்பு பௌரி, ஃபிர்தோஸ் ஷேக் மற்றும் ஷேக் ரெயாஜுதீன் ஆகிய 3 பேரை கைது செய்ததுடன் மாணவியின் ஆண் நண்பரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். இது ஒருபுறமிருக்க நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாகக் கருத்து தெரிவித்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு கல்லூரி நிர்வாகமே முழு பொறுப்பேற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இரவு நேரத்தில் மாணவியை கல்லூரி நிர்வாகம் வெளியே அனுப்ப சம்மதித்தது தவறு எனக் குற்றம் சாட்டியுள்ள அவர், கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியத்தால் மட்டுமே இந்தச் சம்பவம் நடந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சட்டம் – ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய முதலமைச்சர் பொறுப்பற்ற முறையில் பதிலளித்துள்ளதாகப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடந்த அசம்பாவிதத்தால் மிகுந்த வேதனையில் உள்ள தங்கள் மகளின் உயிருக்கு மேற்கு வங்கத்தில் ஆபத்து இருப்பதாகவும், அவரை ஒடிசாவிற்கு திரும்பி அழைத்துச் செல்ல விரும்புவதாகவும் மாணவியின் தந்தை கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
மேலும், தங்கள் மகளை ஒடிசாவிற்கு அழைத்துச் வர உதவுவதாக ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜி உறுதியளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். (BREATH) ஏற்கனவே கடந்த ஆண்டு மேற்கு வங்கத்திலுள்ள மற்றொரு தனியார் மருத்துவ கல்லூரியில், பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
அந்தச் சம்பவத்தின் தாக்கம் மனதைவிட்டு மறைவதற்குள், மற்றொரு மருத்துவ மாணவியும் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளது, மேற்கு வங்கத்தில் பெண்களுக்கான பாதுகாப்பை கேள்விக் குறியாக்கியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.