இந்தியா – ஆஃப்கானிஸ்தான் இடையே மலரும் புதிய உறவு பாகிஸ்தானின் அடிவயிற்றில் கிலியை கிளப்பியுள்ளது. இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பைத் தற்போது காணலாம்..
இந்தியாவுடனான உறவை வலுப்படுத்தும் விதமாகக் கடந்த 10-ம் தேதி டெல்லி வந்த ஆஃப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முத்தாகி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை நேரில் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தொடர்ந்து அந்தச் சந்திப்பு தொடர்பாக இரு நாடுகளின் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு வலுவான கண்டனங்களை பதிவு செய்த ஆஃப்கானிஸ்தானுக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் நன்றி தெரிவித்திருந்தார்.
மேலும், இந்தியா – ஆஃப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் பயங்கரவாதத்திற்கு எதிரான இணைந்த நிலைபாட்டை கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அதேபோல, ஆஃப்கான் அமைச்சர் முத்தாகியும் ஆஃப்கானிஸ்தானின் நிலம் எந்த நாட்டிற்கும் எதிராகச் செயல்படாது என்றும், 40 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதே தங்கள் நாடு அமைதி மற்றும் முன்னேற்றப் பாதையில் சென்றுகொண்டிருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையே ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் பகுதி என அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், அது ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களுக்கு முரணானனது எனக்கூறி பாகிஸ்தான் செய்வதறியாது புலம்பத் தொடங்கியுள்ளது. அதேபோல, பயங்கரவாதம் பாகிஸ்தானின் உள்நாட்டு பிரச்னை எனக் குறிப்பிட்டிருந்த ஆஃப்கானிஸ்தான் அமைச்சரின் கருத்துக்கும் பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மேலும், இது தொடர்பான தங்களின் கவலைகளை இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளிடம் பகிர்ந்துள்ளதாகவும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஃப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு தலிபான் ஆட்சிப் பொறுப்பேற்ற பின், இந்தியா – ஆப்கன் அரசுகள் உயர்மட்ட சந்திப்பில் ஈடுபடுவது இதுவே முதல் முறை.
இந்தச் சந்திப்பின் மூலம் இந்தியா – ஆஃப்கானிஸ்தான் உறவுகள் புதிய திசையில் நகர வாய்ப்புள்ளது என்றாலும், மற்றொரு புறம் பாகிஸ்தானின் எதிர்ப்பால் பிராந்திய அளவிலான பிரச்னைகள் மீண்டும் அதிகரிக்கக்கூடும் என்றும் புவிசார் அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
















