அரிய வகை கனிமங்கள் ஏற்றுமதிக்குப் புதிய கட்டுப்பாடுகளை அண்மையில் சீனா அறிவித்தது. இதன் மூலம் அமெரிக்காவின் மேம்பட்ட தொழில்நுட்ப ராணுவ உற்பத்தியின் முதுகெலும்பை, சீனா நேரடியாகக் குறி வைத்துள்ளது. சீனாவின் இந்தத் திடீர் முடிவால் உலகின் செமி கண்டக்டர் விநியோகச் சங்கிலி முற்றிலுமாகச் சீர்குலையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பை இனி பார்க்கலாம்.
சீன தொழில்நுட்பத் துறையைக் குறிவைத்து, 2019 ஆம் ஆண்டு அப்போதைய ட்ரம்ப் அரசு முதன்முதலில் ஆதிக்கப் போக்கில் அநேக கட்டுப்பாடுகளை அறிவித்ததில் இருந்து, சீன-அமெரிக்க இடையே வர்த்தக மோதல்கள் அதிகரித்து வருகின்றன.
சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சியைத் தடுக்கும் முயற்சியில், சீனாவுக்குத் தண்டனை வரி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை அமெரிக்கா தொடர்ந்து விதித்து வருகிறது. ஆனாலும் கடந்த எட்டு ஆண்டுகளில், அவற்றையெல்லாம் மீறி, உலகின் தொழில்துறை வல்லரசாகச் சீனா முன்னேறியுள்ளது.
சீனாவின் உற்பத்தித் துறை இப்போது அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், தென் கொரியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் மொத்த உற்பத்தித் துறையை விடவும் பெரியதாக உள்ளது. மேம்பட்ட செமி கண்டக்டர்களைத் தவிர, அமெரிக்க விநியோகங்களைச் சார்ந்திருப்பதைச் சீனா கணிசமாகக் குறைத்துள்ளது.
தொடர்ந்து, கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி, காலியம், ஜெர்மானியம், ஆண்டிமனி மற்றும் சூப்பர்ஹார்ட் பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதை உடனடியாக நிறுத்தியது சீனா. அரிய பூமி தாதுக்கள் ஏற்றுமதிக்கு தடை என்பது, அமெரிக்காவின் அநியாய வரிகள் மற்றும் தொழில்நுட்பத்தின் மீதான தடைகளுக்குச் சீனாவின் நேரடி பதிலடி என்று உலக அளவில் பார்க்கப்பட்டது.
சர்வதேச அளவில் அரிய மண் கனிம உற்பத்தியில் சீனாவே ஆதிக்கம் செலுத்துகிறது. உலகின் அரிய பூமி கனிமங்களில் 60 சதவீதத்தைச் சீனா தான் உற்பத்தி செய்கிறது. மேலும், உலகளாவிய அரிய மண் கனிம சுத்திகரிப்பில் 90 சதவீதத்தைச் சீனா தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. குறிப்பாக, அமெரிக்காவின் அரிய மண் தாதுக்கள் இறக்குமதியில் 72 சதவீதத்தைச் சீனா தான் வழங்குகிறது.
மேம்பட்ட ஏவுகணைகள் அதிநவீன ராணுவ தளவாடங்கள் மற்றும் வெடிமருந்துகளை உருவாக்குவதில் அமெரிக்காவை விடச் சீனா கணிசமாக முன்னேறி வருகிறது. அமெரிக்காவின் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் அனைத்தும் சீனாவின் இந்த அரிய மண் கனிமங்களையே நம்பியுள்ள நிலையில், சீனாவின் அரிய மண் கனிமத் தடை, அமெரிக்காவின் பாதுகாப்புக்கே ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், அரிய மண் கனிமங்களின் ஏற்றுமதி கட்டுப்பாடுகளைச் சீனா மேலும் கடுமையாக்கியுள்ளது. புதிய விதிகளின்படி, சுரங்கம் தோண்டுதல், உருக்குதல் மற்றும் சுத்திகரிப்பு உள்ளிட்ட தொழில்நுட்பங்களை ஏற்றுமதி செய்ய விரும்பும் நிறுவனங்களும், சீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட கனிமங்களை வெளிநாடுகளுக்கு வழங்கும் நிறுவனங்களும் அரசிடம் புது உரிமம் பெற வேண்டும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பை உறுதிசெய்வதற்கும், போர் மற்றும் மற்ற முக்கியமான துறைகளில் இந்தக் கனிமங்களைப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகச் சீனா வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. திடீரென அரிய மண் தாதுக்களை ஏற்றுமதி செய்யச் சீனா கட்டுப்பாடு விதித்திருப்பதால், கார்கள் முதல் ஏவுகணைகள் வரை தயாரிக்கும் நிறுவனங்கள் அனைத்தும் பாதிக்கப்படையும் என்றும் அமெரிக்காவுக்கு இது கடும் நெருக்கடியாக இருக்கும் என்றும் வணிக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் இந்த நடவடிக்கை உலகளாவிய விநியோகச் சங்கிலிகள், மேம்பட்ட தொழில்நுட்ப உற்பத்தி மற்றும் புவிசார் அரசியல் ஆகியவற்றில் நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. எது எப்படியோ, வர்த்தகப் போரில் அமெரிக்காவை வெளிப்படையாகவும் நேரடியாகவும் எதிர்கொள்ள சீனா தயாராகி விட்டதையே இது காட்டுகிறது.
















