மதுரையில் பூங்கா அமைக்கும் விவகாரத்தில் பொதுமக்களுடன் தகராறில் ஈடுபட்ட திமுக நிர்வாகி அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாநகராட்சி 2வது வார்டு திமுக கவுன்சிலர் அமுதாவின் கணவரும், சம்மட்டிபுரம் பகுதி செயலாளருமான தவமணி என்பவர், வேல்முருகன் நகரில் உள்ள திறந்தவெளி இடத்தில் கவுன்சிலர் அலுவலகம் கட்ட அனுமதி கேட்டுள்ளார்.
அதற்கு குடியிருப்போர் நலச் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், சிறுவர் பூங்கா கட்ட முயன்றுள்ளார்.
இதனைக் கண்டித்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்த நிலையில், எந்தவிதப் பணியையும் கட்டாயமாக மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிடப்பட்டது.
அதையும் மீறி கடந்த 9ம் தேதி அன்று பூமிபூஜைப் போட முயன்றவரை, குடியிருப்போர் நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் பழனிக்குமார் தடுத்துள்ளார்.
இதனால் கோபமடைந்த தவமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் பழனிக்குமாரையும், அவரது மனைவியையும் தாக்கி மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாகப் பழனிகுமார் அளித்த புகாரின் அடிப்படையில், பெண் வன்கொடுமைத் தடுப்புசட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, திமுகவில் இருந்து தவமணியை நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.