இந்தியாவின் படித்த உயர்தட்டு மக்கள் தேசப் பக்தியையும் உள்ளூர் அடையாளங்களையும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு வலியுறுத்தியுள்ளார். நாட்டின் வளர்ச்சிக்கு இது மிகவும் முக்கியமானது என்றும் விளக்கியுள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்குப் போட்டியாக, ZOHO நிறுவனத்தைத் தொடங்கிய ஸ்ரீதர் வேம்பு, பிரதமர் மோடியின் ஆத்ம நிர்பர் குறிக்கோளின் படியே, தனது நிறுவனத்தையும் MADE IN INDIA -MADE FOR GLOBE என்று உருவாக்கியுள்ளார்.
நகர்ப்புற இந்தியர்களிடையே மறைந்து வரும் தேசிய உணர்வை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்று கூறியுள்ள ஸ்ரீதர் வேம்பு,தனது நிறுவனத்தின் வெற்றிக்கு ZOHO ஊழியர்களின் தேசப் பக்தியே காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.
உலகமயமாக்கல் என்பது பல நகர்ப்புற இந்தியர்களை தங்கள் வேர்களிலிருந்து பிரித்து விட்டது என்றும், அதனால் அவர்கள், இந்தியாவின் குடிமக்கள் என்ற உணர்வை இழந்து விட்டனர் என்றும், அதற்கு மாறாகத் தங்களை ஒரு “உலகளாவிய குடிமக்களாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
உண்மையான தேசிய உணர்வின் வெளிப்பாடுகளாக உள்ளூர் மொழிகளையும் தங்கள் மாநில அடையாளங்களையும் இந்திய இளைஞர்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்றும் ஸ்ரீதர் வேம்பு வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவின் உள்ள மாநில மொழிகளைக் கற்றுக்கொண்டு பரந்த பாரதத்தின் கலாச்சார மற்றும் மொழியியல் பெருமையை மீண்டும் உயிர்ப்பிக்க இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள ஸ்ரீதர் வேம்பு, எந்த மாநிலத்துக்குச் சென்றாலும் அந்தந்த மாநில மொழிகளில் பேசக் கற்றுக் கொள்ளுமாறும் வேண்டுகோள் வைத்துள்ளார். மேலும் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் இளைஞர்களுக்கு அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கிராமப்புற இந்தியாவுக்கும், நகர்ப்புற இந்தியாவுக்கும் உள்ள வேறுபாட்டைச் சுட்டிக்காட்டியுள்ள ஸ்ரீதர் வேம்பு, இந்தியாவின் கிராமங்கள் மற்றும் சிறிய நகரங்களில் தேசம் சொந்தம் என்ற நாட்டுப் பற்று வலிமையாக உள்ளது என்றும், நகர்ப்புற மேல்தட்டு மக்களிடையே அது மறைந்து வருகிறது என்றும் கூறியுள்ளார்.
தன்னையே ஒரு உதாரணமாக எடுத்துக்கொண்டு, தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் ஒரு சர்வதேச தொழில்நுட்ப நிறுவனமான ZOHO வின் தலைமை அலுவலகத்தை வைத்திருப்பதைப் பெருமையுடன் ஸ்ரீதர் வேம்பு குறிப்பிட்டுள்ளார்.
வாய்ப்புகளைப் பரவலாக்குவதற்கும் உள்ளூர்த் திறமைகளைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் கிராமப்புறங்களில் அலுவலகங்கள் மற்றும் பயிற்சி மையங்களைக் கட்டி இருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ள ஸ்ரீதர் வேம்பு, ZOHO வெற்றிகரமாகச் செயல்படுவது தம்மால் அல்ல என்றும், தாம் ஒரு மேதை அல்ல என்றும், ZOHO வின் அனைத்து ஊழியர்களும் தேசிய உணர்வுடன் இருப்பதால், நாட்டுக்காக ZOHO வை வெற்றிகரமாக்க வேண்டும் என்று உழைக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
ஜப்பான், கொரியா மற்றும் சீனா போன்ற நாடுகளின் வேகமான வளர்ச்சிக்குத் தேசிய பெருமை மற்றும் தேசத்தின் மீதான நம்பிக்கையுடன் கூடிய தன்னம்பிக்கையே அடிப்படை என்று குறிப்பிட்டுள்ளார். உலகமயமாக்கல் தலைகீழாக மாறும்போது, இந்தியா அதன் சொந்தப் பரந்த உள்நாட்டுச் சந்தையை நம்பியிருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்,
4 டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவில் உள்ள இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வேகமாக அதிகரித்து வரும் சூழலில், தொழில்நுட்பத் துறையிலும் நாடு தன்னிறைவு பெறவும், மற்ற நாடுகளுடன் சமமாக வர்த்தகம் செய்யவும் ZOHO ஸ்ரீதர் வேம்புவின் கருத்துக்கள் இளைஞர்களுக்கு ஒரு உத்வேகமாக அமைந்துள்ளது.
















