பிரான்ஸிலிருந்து நீர்மூழ்கிக் கப்பல்கள் வாங்கும் திட்டத்தை மாற்றி, ஜெர்மனியின் நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்திய பசிபிக் கடல் பகுதியில், பெரும் அச்சுறுத்தலாக, சீனா தனது கடற்படை வலிமையை அதிகரித்து வரும் நிலையில் இந்தியா இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இந்திய கடற்படை அடுத்த 10 ஆண்டுகளில், தன்னிடம் உள்ள 10 பழைய நீர்மூழ்கி கப்பல் களை மாற்ற திட்டமிட்டுள்ளது. சீனாவும், பாகிஸ்தானும் தனது கடற்படையை விரைவாக விரிவுபடுத்தி வருவதால், இந்தியாவும் தனது கடற்படையை நவீனப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம், இந்தியாவின் ஆழ்கடல் பாதுகாப்புத் திறனை அதிகரிக்கும் வகையில் அடுத்த ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நீர்மூழ்கி கப்பல் ஒப்பந்தங்களை இறுதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டது.
பிரான்ஸின் Naval Group உடன் இணைந்து ஸ்கார்பீன் நீர் மூழ்கி கப்பல்களையும், ஜெர்மனியின் ThussenKrupp நிறுவனத்துடன் இணைந்து Stealth நீர் மூழ்கி கப்பலையும் உருவாக்க மத்திய அரசு முடிவெடுத்தது.
கடந்த ஜனவரி மாதம், இந்த ஆறு நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டுவதற்கு அரசுக்குச் சொந்தமான மசகான் நிறுவனத்தை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தேர்ந்தெடுத்தது.
PROJECT 75 திட்டத்தின் கீழ், ஜெர்மன் நாட்டின் ஆதரவுடன் இந்தியாவில் கட்டப்படும் ஆறு நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதற்கான 70,000 கோடி ரூபாய் ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்க பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் மசகான் நிறுவனத்துக்கு மத்திய அரசு, கடந்த ஆகஸ்ட் மாதம் அனுமதி வழங்கியது. 6 அதி நவீன நீர்மூழ்கி கப்பல்களைத் தயாரிக்கத் திட்டமிடப் பட்டது.
தொழில்நுட்ப பரிமாற்றத்துடன் சுமார் 60 சதவீதத்துக்கும் மேல் உள்நாட்டுத் தொழில்நுட்பத்துடன் உருவாகும் இந்தக் கப்பல்கள், எதிர்கால PROJECT 76 திட்டத்துக்கு ஒரு அடித்தளமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கடந்த 44 ஆண்டுகளில் இந்தியா-ஜெர்மனி ஒன்று சேர்ந்து கப்பல்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவது இதுவே முதல்முறையாகும். ஜெர்மனியின் ‘திஸ்ஸென்க்ரப் மரைன் சிஸ்டம்ஸ்’ நிறுவனம் ஏற்கெனவே இந்தியாவுக்குக் கப்பல்களை தயாரித்துக் கொடுத்துள்ளது.
1980களில் இந்தியா 4 HDW Class 209 ரக நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரித்தது. இந்தக் கப்பல்கள் கட்டுமானத்தில் ஜெர்மனியின் ‘திஸ்ஸென்க்ரப் மரைன் சிஸ்டம்ஸ்’ நிறுவனம் முக்கிய பங்காற்றியது.
இந்நிலையில், சுமார் 36,000 கோடி ரூபாய் மதிப்பில், கூடுதலாக மூன்று ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான திட்டத்துக்கான இறுதி முடிவு என்னும் எடுக்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூன்று ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான மதிப்பீட்டுப் பேச்சுவார்த்தைகள் கடந்த நிதியாண்டிலேயே முடிவடைந்து இருந்தாலும், பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் இறுதி ஒப்புதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்திய விமானப்படைக்கான சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 114 பல்துறைப் போர் விமானங்களுக்கான சிறப்புத் திட்டத்தின் கீழ்க் கூடுதல் ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்குப் பிரான்சிடம் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.
மேலும், இந்தியாவின் ஐந்தாவது தலைமுறை மேம்பட்ட நடுத்தர ஸ்டெல்த் போர் விமான தயாரிப்புக்காக 61,000 கோடி ரூபாய் மதிப்பில், ஒரு புதிய சக்திவாய்ந்த இன்ஜினைப் பிரான்ஸுடன் இணைந்து உருவாக்குவதற்கானதிட்டமும் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கடந்த ஜூன் மாதம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பலான ஐ.என்.எஸ். அர்னாலா, இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த செப்டம்பரில் , இரண்டாவது கப்பலான ஐ.என்.எஸ்., ஆண்ட்ரோத் கடற்படையில் இணைக்கப்பட்டது.
சீனாவும் பாகிஸ்தானும் கடற்படையை வலிமையாக்கி வரும் நிலையில் இந்தியா கடற்சார் பாதுகாப்பில் மிக வேகமாக முன்னேறிவருகிறது.
















