ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்கு இனி பாதுகாப்பான இடமே இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
ஹரியானா மாநிலம் மானேசர் நகரில், என்எஸ்ஜி-யின் கருப்புப் பூனைக் கமாண்டோ பிரிவினுடைய 41வது நிறுவனத் தின விழா நடைபெற்றது.
இதில் பங்கேற்றுப் பேசிய அமித்ஷா, பிரதமர் மோடி தலைமையின் கீழ்ப் பயங்கரவாதத்தை சகித்துக் கொள்வதில்லை என்ற கொள்கையை மத்திய அரசு பின்பற்றி வருவதாகக் கூறினார்.
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத நிலைகள் துல்லியமாகத் தகர்க்கப்பட்டதை ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை உறுதிபடுத்தியதாகக் குறிப்பிட்ட அவர், பஹல்காம் தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளை வேட்டையாட நமது பாதுகாப்பு படையினர் ஆப்ரேஷன் மகாதேவ் நடவடிக்கையை மேற்கொண்டதாகத் தெரிவித்தார்.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு பயங்கரவாதிகள் எங்கு பதுங்கியிருந்தாலும் அவர்களுக்கு இனி பாதுகாப்பான இடமே கிடையாது என்பதை இந்தியா ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.