தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டெல்லியில் பசுமை பட்டாசுகளை வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
காற்று மாசு காரணமாக டெல்லியில் பட்டாசு தயாரிக்கவும், விற்பனை செய்யவும், வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. பட்டாசு வெடிக்கவும், பசுமை பட்டாசுகளை விற்பனை செய்ய அனுமதி கோரியும் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பட்டாசுகள் வெடிக்க அனுமதி கோரிய மனுக்கள் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதில், டெல்லி மற்றும் ஹரியானாவை உள்ளடக்கிய என்.சி.ஆர் டெல்லியின் 14 மாவட்டங்களில் பட்டாசுகள் விற்பனை செய்ய இடைக்கால அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அக்டோபர் 18ம் தேதி முதல் 21ஆம் தேதி வரை பசுமை பட்டாசுகளை விற்பனை செய்து கொள்ளலாம் எனவும் ஆணையிட்டனர்.
டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 8 மணி முதல் இரவு 10 மணி வரையும் பட்டாசுகள் வெடிக்க அனுமதி வழங்கப்படும் என்றும்,
அனுமதிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டும்தான் விற்பனை நிலையங்களில் விற்கப்படுகிறதா என்பதை காவல்துறையினர் கண்காணிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்யக்கூடாது என்றும், அதற்கான தடை தொடரும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.