தமிழகத்தில் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உட்பட ஆறு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வ மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, வரும் 19-ஆம் தேதி தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், கேரள – கர்நாடக பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும்
கடலூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்,
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் உட்பட 24 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.