தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகியோர் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து தவெகவினர் மற்றும் குடும்பத்தினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் கைது செய்யப்பட்ட தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகியோருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில், இருவரும் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
அப்போது SIT சார்பாக காவல் நீட்டிப்பு கேட்பது சட்டவிரோதம் என்றும் சிபிஐ விசாரணையின்போது, மதியழகனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாகவும், தினமும் நீதிமன்றத்தில் கையெழுத்திட செய்வதாகவும் தவெக தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். இதையடுத்து மதியழகன் மற்றும் பவுன்ராஜுக்கு காவல் நீட்டிப்பு இல்லை என்று நீதிபதி உத்தரவிட்டார்.
நீதிபதியின் இந்த உத்தரவு காரணமாக இருவரும் விடுவிப்பு செய்யப்பட்டுள்ளனர். நீதிபதியின் உத்தரவு நகல் வெளியான பிறகு, சிறை நடவடிக்கைகள் முடிந்த பிறகு இருவரும் வியாழக்கிழமை வெளியே வருவார்கள் என தவெக தரப்பு வழக்கறிஞர் ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கறிஞர்களுக்கு தவெக நிர்வாகிகளும், மதியழகன் மற்றும் பவுன்ராஜ் குடும்பத்தினரும் இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.