தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் கொட்டி தீர்த்த கனமழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்து பொதுமக்கள் கடும் சிரமமடைந்துள்ளனர்.
திருச்செந்தூரில் சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக சிவன் கோயில் மற்றும் ஜூவா நகர், ஜே.ஜே நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. மழைநீர் உட்புகாமல் இருக்க நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் தேங்கிய மழை நீரை பொதுமக்களே வாளிகள் மூலம் அகற்றினர்.
இதேப்போல், திருச்செந்தூரில் சாலைகளில் மழைநீர் தேங்கிய நிலையில், கழிவு நீர் ஓடைகளில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை நகராட்சி தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பு உகரணங்கள் இன்றி வெறும் கைகளால் சுத்தம் செய்யும் அவலம் நிகழ்ந்துள்ளது.
தூத்துக்குடி அரசு மருத்துவமனை நுழைவாயில் பகுதி மற்றும் பெண்கள் மகப்பேறு வார்டு, சிறுவர்கள் காய்ச்சல் வார்டுக்கு செல்லும் பகுதியில் வெள்ள நீர் தேங்கியது. இதனால், சிகிச்சைக்காகவும், உள்நோயாளியாகவும் உள்ளோர் கடும் அவதி அடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. அதிகபட்சமாக நாங்குநேரியில் 67 மில்லி மீட்டரும், மூலைக்கரைப்பட்டியில் 60 மில்லி மீட்டரும், பாளையங்கோட்டையில் 56 மில்லிமீட்டரும், அம்பையில் 54 மில்லி மீட்டரும், நெல்லையில் 32 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. குறிப்பாக நெல்லை டவுன் ரத வீதிகளில் மழைநீர் தேங்கியிருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர்.