பாமகவின் உட்கட்சி பிரச்னையை சட்டமன்றத்திற்கு வெளியே வைத்துக் கொள்ள வேண்டும் என சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சட்டப்பேரவையில் கோல்ட்ரிப் மருந்து விவகாரம் தொடர்பாக கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தில் ராமதாஸ் தரப்பு எம்எல்ஏ அருளுக்கு பேச வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்புமணி தரப்பு எம்எல்ஏக்கள் 3 பேரும் சபாநாயகரின் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.அப்போது விளக்கமளித்த சபாநாயகர், சட்டப்பேரவையை பொறுத்தவரை எதிர்க்கட்சி வரிசையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு மட்டும் தான் குறிப்பிட்ட இடத்தில் இருக்கை ஒதுக்குவதற்கான விதிமுறை இருப்பதாகவும், மீதமுள்ள உறுப்பினர்களுக்கு இருக்கை ஒதுக்குவது தன்னுடைய முடிவு எனவும் தெரிவித்தார்.
பாமகவின் உட்கட்சி பிரச்னைகளை சட்டமன்றத்திற்கு வெளியே வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.
மேலும், தொடர்ச்சியாக தர்ணாவில் ஈடுபடும் அன்புமணி தரப்பு ஆதரவு எம்எல்ஏக்கள் உடனடியாக இருக்கைக்கு செல்லவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். இதனை அடுத்து சபாநாயகரின் நடவடிக்கையை கண்டித்து அன்புமணி தரப்பு ஆதரவு எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.