தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்கனமழை காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. அல்லிநகரம், வடபுதுப்பட்டி, அரண்மனைபுதூர் உள்ளிட்ட இடங்களில் நேற்று விடிய விடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக மழைநீர் தாழ்வான பகுதிகளிலும், குடியிருப்புகளிலும் தேங்கும் நிலை ஏற்பட்டது. மேலும், சாலையில் மழை நீருடன், கழிவு நீர் தேங்கியதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதியடைந்தனர்.
அதேபோல் வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 25 ஆயிரத்து 366 கன அடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். உசிலம்பட்டி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான செட்டியபட்டி, நக்கலப்பட்டி, சீமானூத்து உள்ளிட்ட பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.