தாய் நாட்டைப் பற்றித் தவறாகப் பேசும் ராகுல் காந்திக்கு, பிரதமராகும் தகுதியும் புத்திசாலித்தனமும் இல்லை என்று பிரபல ஆப்பிரிக்க அமெரிக்க பாடகியும் ஹாலிவுட் நடிகையும் அமெரிக்க அரசின் கலாச்சார தூதருமான மேரி மில்பென் தெரிவித்துள்ளார். அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதன் மூலம் உக்ரைன் மீதான போரை ரஷ்யா தொடர்ந்து நடத்த சீனாவும் இந்தியாவும் உதவி வருவதாக ட்ரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். இதன் காரணமாகவே இந்தியா மீது 50 சதவீத வரி விதித்துள்ளார். தேச நலனுக்காக இந்தியா தொடர்ந்து ரஷ்ய எண்ணெயை வாங்கும் என்று சொல்லி வந்த நிலையில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தப்போவதாகப் பிரதமர் மோடி உறுதியளித்ததாக அமெரிக்க அதிபர் தெரிவித்திருந்தார்.
இதனை மறுத்துள்ள மத்திய அரசு, இந்திய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு எண்ணெய் கொள்முதல் எடுக்கப்படும் என்று உறுதியாகத் தெரிவித்தது. ட்ரம்ப்பின் கருத்தைத் தனக்கு சாதகமாக வைத்து, ட்ரம்பைக் கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார் என்று காங்கிரஸ் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சனம் செய்திருந்தார்.
ராகுலின் இந்தப் பதிவுக்கு, பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளரும், அமெரிக்க அரசின் கலாச்சார தூதரும், புகழ் பெற்ற ஆப்பிரிக்க அமெரிக்க பாடகருமான மேரி மில்பென் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ராகுலுக்கு நேரடியாகப் பதிலளித்து பதிவிட்டுள்ள மேரி மில்லிபென், அதிபர் ட்ரம்பைப் பற்றிப் பிரதமர் மோடி பயப்படவில்லை, மாறாக அமெரிக்காவுடன் ராஜதந்திரமாகச் செய்லபடுகிறார் என்று கூறியுள்ளார்.
மேலும், எப்போதும் அமெரிக்காவின் நலன்களை ட்ரம்ப் முதன்மைப்படுத்துவது போல, பிரதமர் மோடியும் இந்தியாவுக்குச் சிறந்ததைச் செய்வதாகக் கூறியுள்ள மேரி மில்பென், அதற்காகவே பிரதமர் மோடியைப் பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார். நாட்டின் பிரதமராகும் திறமையும் தகுதியும் ராகுல் காந்திக்கு இல்லை என்று குறிப்பிட்டுள்ள மேரி மில்பென், அதனால் தான் பிரதமர் மோடியின் தலைமைப் பண்பை ராகுல் காந்தியால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று சுட்டிக் காட்டியுள்ளார்.
தாய் நாட்டைப் பற்றி தவறாகப் பேசும் ராகுல் காந்தி, வழக்கம் போல், ஒற்றை ஆளாக I Hate India என்ற சுற்றுப்பயணத்துக்குச் செல்வதே நல்லது என்று ராகுலை கிண்டலடித்துள்ள மேரி மில்பென், வெளிநாடுகளுக்குச் சென்று இந்தியாவைப் பற்றியும், இந்திய மக்களைப் பற்றியும் தவறாகப் பேசுபவரை ஒருபோதும் மக்கள் ஏற்கமாட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவிலும் உலகெங்கிலும் பெரும்பாலும் அமெரிக்காவின் “தேசிய கீதப் பாடகி” என்று அழைக்கப்படும் மேரி மில்பென், தொடர்ச்சியாக, ஜார்ஜ் டபிள்யூ. புஷ், பராக் ஒபாமா, டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜோ பைடன் என நான்கு அமெரிக்க அதிபர்களுக்குத் தேசிய கீதம் மற்றும் தேசபக்தி இசையை நிகழ்த்தியுள்ளார்.
அமெரிக்க அரசின் கலாச்சார தூதராக இருக்கும் மேரி மில்பென், பிரதமர் மோடியைப் புகழ்ந்து பேசுவதில் ஒருபோதும் தயங்கியதில்லை. 2023ம் ஆண்டு,75வது சுதந்திர தின கொண்டாட்டங்களில் பங்கேற்க இந்தியாவுக்கு அழைக்கப்பட்ட முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க இசைக் கலைஞரான மேரி மில்பென், 2020ம் ஆண்டு பாடிய ‘ஓம் ஜெய் ஜெகதீஷ் ஹரே’ என்ற இந்திப் பாடல் சர்வதேச அளவில் புகழ் பெற்றது.
கடந்த 2023-ம் ஆண்டுப் பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணத்தின்போது அவரை முதல் முறையாகச் சந்தித்த மேரி மில்பென் அன்றிலிருந்து அவரின் தீவிர பக்தராகவே ஆகிவிட்டார் என்று சொல்லலாம். இந்தியாவின் தேசிய கீதத்தைப் பாடிவிட்டு, பிரதமர் மோடியின் கால்களைத் தொட்டு வணங்கி மேரி மில்பென் ஆசி பெற்றதை உலகமே ஆச்சரியத்துடன் பார்த்து வியந்தது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒரு உண்மையான ஜனநாயகச் செயல் எனக் கூறிய மில்பென், துன்புறுத்தப்பட்ட மத சிறுபான்மையினருக்கு அடைக்கலம் அளித்ததற்காகப் பிரதமர் மோடியைப் பாராட்டியிருந்தார். பிரதமர் மோடியின் தலைமையை அங்கீகரித்து இந்தியாவுடனான ராஜதந்திர உறவுகளை அமெரிக்க அரசு மேம்படுத்த வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இந்தியா மற்றும் இந்திய மக்களிடம் நல்ல மதிப்பும் மரியாதையும் வைத்துள்ள மேரி மில்லிபென் இந்தியாவின் குடியரசு தலைவராகத் திரௌபதி முர்மு தேர்ந்தெடுக்கப் பட்ட போதும் பாராட்டி இருந்தார். பெண்கள் அதிகாரமளிப்பதில் பிரதமர் மோடியின் முயற்சிகளைப் பாராட்டிய மேரி மில்பென் இந்தியாவின் முன்னேற்றத்துக்கான ஒரே தலைவர் பிரதமர் மோடி என்று வெளிப்படையாகக் கூறியிருந்தார்.
G20 அமைப்பில் ஆப்பிரிக்காவை முழு உறுப்பினராகச் சேர்க்கும் பிரதமர் மோடியின் முன்மொழிவுக்குப் பாராட்டு தெரிவித்திருந்த மேரி மில்பென், உலகத்தைப் பாதிக்கும் விஷயங்களில் இருந்து, பிரதமர் மோடி தலைமையிலான குளோபல் சவுத் தான் தீர்வளிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
சமீபத்தில், பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து, மேரி மில்லிபென் வெளியிட்ட வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாக வைரலானது குறிப்பிடத் தக்கது. சக்திவாய்ந்த ஆன்மீக ஒளியுடன் பாரம்பரிய பாரதப் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையில் வேரூன்றிய வசுதைவ குடும்பகம் என்ற குறிக்கோளைச் செயல்படுத்தும் பிரதமர் மோடியை உலகமே மதிக்கிறது என்று பெருமிதத்துடன் கூறிவருகிறார் மேரி மில்பென்.
இதற்கிடையே, கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மூன்று மாதங்களாக ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியைக் குறைந்திருந்த இந்தியா அக்டோபரில் இறக்குமதியை மீண்டும் அதிகரித்துள்ளது. பண்டிகை கால எரிசக்தி தேவை காரணமாக இந்த அதிகரிப்பு என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.