கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசால் தடை விதிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஊர்வலத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக சற்று விரிவாக காணலாம் இந்த செய்தி தொகுப்பில்…
கர்நாடக மாநிலம், கலபுரகி மாவட்டத்தில் உள்ள சித்தாபூர் பகுதியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவையொட்டி, ஊர்வலம் நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரப்பட்டது.
ஆனால், அதே நாள் அதே இடத்தில் பீம் ஆர்மி மற்றும் பாரதிய தலித் பாந்தர் போன்ற சமூக அமைப்புகளும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்ததாக குறிப்பிட்ட மாவட்ட நிர்வாகம், சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்தது. இதனை எதிர்த்து கலபுரகி ஆர்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்பாளர் தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு நீதிபதி எம்.ஜி.எஸ். கமல் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு அனைவரின் உணர்வுகளையும் மதித்து சமநிலையுடன் செயல்பட வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மேலும், அனைத்து அமைப்புகளும் தங்கள் உரிமைகளை சட்டப்படி அனுமதி பெற்று பயன்படுத்த முடியும் என குறிப்பிட்ட நீதிபதிகள், நவம்பர் 2-ம் தேதி ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஊர்வலம் நடத்திக்கொள்ள அனுமதியளித்து உத்தரவிட்டனர். அதற்காக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பு புதிய மனுவை கலபுரகி துணை ஆணையரிடம் தாக்கல் செய்ய அறிவுறுத்திய நீதிபதிகள், மாவட்ட அதிகாரிகள் அது தொடர்பான அறிக்கையை வரும் அக்டோபர் 24-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
அண்மையில் சித்தாபூர் பகுதியைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் சுவயம் சேவக் ஒருவர் அமைச்சர் பிரியங்க் கார்கேவுக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்ட சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. அதேபோல, சித்தாபூர் பகுதி முழுவதும் வைக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் கொடிகள் மற்றும் பதாகைகளை, மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில் போலீசார் அகற்றியதும் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட சூழலை கூடுதல் பரபரப்பாகியது.
மற்றொருபுறம் கர்நாடக அரசு எந்த தனியார் அமைப்பும் அரசின் இடங்கள் அல்லது பொது இடங்களில் நிகழ்ச்சி நடத்த, முன்னரே அனுமதி பெற வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக சார்பில் பல்வேறு விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. அந்த விமர்சனங்களுக்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் சித்தராமையா, இந்த விதி பாஜக ஆட்சிக்காலத்தில் இயற்றப்பட்டது எனவும், தங்கள் அரசு அந்த விதியை மீண்டும் நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு நீதிமன்றம் அனுமதியளித்ததை வரவேற்றுள்ள பாஜக மாநிலத் தலைவர் விஜயேந்திர எடியூரப்பா, அரசியலமைப்பை காக்கும் தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் அரசு வடகொரிய அரசு போல் கொடுங்கோல் ஆட்சி நடத்தி வருவதாக குற்றம் சாட்டிய விஜயேந்திர எடியுரப்பா, தற்போதைய நீதிமன்ற தீர்ப்பின் மூலம் ஊர்வலத்தை தடுக்க முயன்ற காங்கிரஸ் அரசு நாணக்கேடு அடைந்துள்ளதாக விமர்சித்தார்.
கர்நாடகாவில் இந்த வழக்கு ஒரு முக்கிய அரசியல் விவாதமாக மாறியுள்ள நிலையில், பொது இடங்களில் கூட்டம் நடத்தும் உரிமை மற்றும் சட்டம்-ஒழுங்கு ஆகியவற்றுக்கு இடையேயான சமநிலை குறித்த விவாதம் மீண்டும் எழுந்துள்ளது. அதே நேரத்தில், நீதிமன்றம் ஊர்வலத்துக்கான உரிமையை மறுக்காமல், நிர்வாக ஒப்புதலுடன் நடத்த வழிகாட்டுதலை வழங்கியுள்ளதும் பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில், சித்தாபூரில் நவம்பர் 2-ம் தேதி நடைபெறவுள்ள ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் ஒரு புதிய அரசியல் சூழலை உருவாக்கவுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.