தொடர் கனமழை காரணமாகச் சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழை மற்றும் கிருஷ்ணா நதி நீரின் வரத்தின் காரணமாகச் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
ஏரியின் நீர் மட்டம் 21 அடியை நெருங்கிக் கொண்டிருந்த நிலையில் அணையின் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 100 கன அடி உபரி நீர் திறக்கப்படும் எனக் காஞ்சிபுரம் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவித்தார்.
அதன் அடிப்படையில் ஏரியில் உள்ள ஐந்து கண் மதகின் மூன்றாவது செட்டர் வழியாக 100 கன அடி உபரி நீரானது திறந்து விடப்பட்டது.
உபரி நீர் திறக்கப்படும் தகவல் வெளியானதையடுத்து அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் செம்பரம்பாக்கம் ஏரியின் அருகே ஒன்று கூடி ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
நீர்திறப்பு காரணமாகக் குன்றத்தூர், சிறுகளத்தூர், திருமுடிவாக்கம் என 10 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.