தருமபுரி மாவட்டம் அரூர்–தீர்த்தமலை பகுதியில், மாநிலத்திலேயே அதிகபட்ச மழை பாதிவாகியுள்ளது.
தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், கடத்தூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பதிவானது. தருமபுரியின் இலக்கியம்பட்டி பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதியடைந்தனர். மழைநீருடன் கழிவுநீரும் கலந்ததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரூர்–தீர்த்தமலை பகுதியில், மாநிலத்திலேயே அதிகபட்ச மழை பாதிவாகியுள்ளது. அங்கு 176 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், அப்பகுதியில் உள்ள ஆறு, ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கனமழையால் ஆறு போல் மழைநீர் பாய்ந்தோடியதால் மக்கள் அவதியடைந்தனர். செங்கம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 மணிநேரம் கனமழை பெய்தது. இதனால், இறையூர் அருகே உள்ள உச்சிமலைகுப்பம் பகுதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. உரிய வடிகால் வசதி செய்து தராததே இத்தகைய பாதிப்புகளுக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.