கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே தொடர் மழை காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளது.
குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கல்குணம், ரெட்டிபாளையம், பூதம்பாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கனமழை பெய்தது.
இதன்காரணமாக விளைநிலங்களில் மழைநீர் தேங்கி அப்பகுதியில் பயிரிடப்பட்டிந்த சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தது. இந்நிலையில், வடிகால் வாய்க்கால்களை மாவட்ட நிர்வாகம் தூர்வாரி பயிர்கள் சேதம் அடையாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேபோல், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பெய்த கனமழையால் சுமார் மூன்றாயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனையடைந்தனர். சிதம்பரம் சுற்றுவட்டார பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக அவ்வப்போது விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், பெருங்காலூர், முகையூர், பரிவளாகம், சிறுகாலூர் உள்ளிட்ட பகுதி விளைநிலங்களில் மழை நீர் தேங்கி நெற்பயிர்கள் சேதமாகின. பாசன வாய்க்காலை தூர்வாராததே இதற்கு காரணம் என விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கனமழையால் நெற்பயிர் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். சங்கராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதனால், தியாகராஜபுரம், பூட்டை அரசம்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. உடனடியாக கால்வாய் அமைத்து மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.