இந்தியாவை தாக்குவதற்கு முன்னால் பாகிஸ்தான் ஒருமுறைக்கு 100 முறை இனி யோசிக்கும் என, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் ராணுவத் தளபதிகள் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் முப்படைகளின் ராணுவ தளபதிகள், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
அப்போது ராணுவ வீரர்களுடன் சேர்ந்து ஒன்றாக உணவருந்திய ராஜ்நாத் சிங், அவர்கள் அனைவருடன் உரையாடலில் ஈடுபட்டார். பின்னர் பேசிய அவர், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானுக்கு சரியான பாடத்தை புகட்டியுள்ளதாக தெரிவித்தார்.
இனி இந்தியாவை தாக்குவதற்கு முன்னால் பாகிஸ்தான் 100 முறை யோசிக்கும் என கூறிய அவர், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை எனவும் அது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்தார்.
பாகிஸ்தான் மீண்டும் ஏதேனும் சாகசத்தை செய்ய முயற்சித்தால் அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பது அந்நாட்டிற்கே நன்றாக தெரியும் எனவும் அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.
















