கனமழை காரணமாக வேலூரில் பல்வேறு வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடையும் நிலை ஏற்பட்டது.
வேலூரின் காட்பாடி, ஒடுக்கத்தூர், பள்ளிகொண்டா, குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளிலும், தெருக்களிலும் மழைநீர் குளம் போல தேங்கியது. பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் சென்றதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். ஆண்டுதோறும் பருவமழையின் போது இதே நிலை நீடிப்பதாகவும், பலமுறை புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் மக்கள் வேதனை தெரிவித்தனர்.
இதே போல பேரணாம்பட்டு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் ஒருமணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை நீடித்தது. விகோட்டா சாலையில் அதிக அளவு மழைநீர் தேங்கியதால் அங்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் கடும் அவதி அடைந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், மழை பெய்யும் போதெல்லாம் இதே நிலை நீடிப்பதாகவும் , மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
















