வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று மேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்ததாகவும்,
தற்போது, இந்தக் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 8 கிலோ மீட்டர் வேகத்தில் வடமேற்கில் நகர்ந்து வருவதாகவும், சென்னைக்கு சுமார் 800 கிலோ மீட்டர் தொலையில் கிழக்கு தென்கிழக்கு திசையில் மையம் கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் ‘மோன்தா’ புயலாக வலுவடையும் என்றும், இந்த புயலானது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 28ஆம் தேதி தீவிர புயலாக வலுப்பெற்று, ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினம் இடையே கரையைக் கடக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது, மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் தரைக் காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
















