சாம்பல் பட்டியலில் இருந்து நீக்கியது பாகிஸ்தானுக்கு பயங்கரவாதத்துக்கு நிதியளிக்க உரிமம் வழங்காது என்று நிதி நடவடிக்கை பணிக்குழு பாகிஸ்தானுக்கு கடுமையான எச்சரித்துள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
நிதி நடவடிக்கை பணிக்குழுவில் ‘சாம்பல் பட்டியல்’ பாகிஸ்தானின் வரலாறு பிப்ரவரி 2008-ல் தொடங்கியது. அப்போது அது சாம்பல் பட்டியலில் வைக்கப்பட்டது.
2010ம் ஆண்டு ஜூனில் பாகிஸ்தான் அந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. தொடர்ந்து 2012ம் ஆண்டு பிப்ரவரியில் மீண்டும் பாகிஸ்தான் சாம்பல் பட்டியலில் சேர்க்கப்பட்டது. பின்னர் 2015ம் ஆண்டு பிப்ரவரியில் அந்தப் பட்டியலில் இருந்து மீண்டும் நீக்கப்பட்டது.
2018ம் ஆண்டு ஜூன் மாதம் மூன்றாவது முறையாகப் பாகிஸ்தான் மீண்டும் சாம்பல் பட்டியலில் கொண்டுவரப்பட்டது. 2022ம் ஆண்டு அக்டோபரில் மீண்டும் அந்தப் பட்டியலில் இருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டது.
அப்போது, நாட்டின் பணமோசடி எதிர்ப்பு மற்றும் பயங்கரவாத நிதியுதவி அமைப்பை மேலும் மேம்படுத்த, ஆசிய பசிபிக் குழுவுடன் இணைந்து செயல்படுமாறு, பாகிஸ்தானை நிதி நடவடிக்கை பணிக்குழு கேட்டுக் கொண்டது.
அதற்குப் பிறகும், சாம்பல் பட்டியலில் இருந்து நீக்குவதற்குத் தேவையான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களை பாகிஸ்தான் முழுமையாக அமல்படுத்தத் தவறியது. சாம்பல் பட்டியலில் இருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டது தற்போது ஆய்வுக்கு உட்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பயங்கரவாதத்தின் ஊற்றுக் கண்ணாக உள்ளது என்றும், உலகில் எங்குப் பயங்கரவாத தாக்குதல் நடந்தாலும் அதன் வேர் பாகிஸ்தானில் இருப்பதை சர்வதேச நாடுகள் கண்டுபிடித்துள்ளன என்றும் இந்தியா தொடர்ந்து கூறிவருகிறது.
பயங்கரவாத நடவடிக்கைகளை தடுப்பதில் பாகிஸ்தானின் தோல்வி குறித்தும், இந்தியாவின் எல்லைக்குள் பாகிஸ்தானின் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் குறித்தும் இந்தியா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. மேலும், பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதையே தனது அரசின் கொள்கையாக வைத்திருக்கும் பாகிஸ்தானை மீண்டும் சாம்பல் பட்டியலில் சேர்க்க இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
கடந்த ஜூன் மாதம் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்த நிதி நடவடிக்கை பணிக்குழு, ஒரு நாட்டின் நிதி உதவியும் ஆதரவும் இல்லாமல் இது போன்ற தாக்குதல் சாத்தியமற்றது என்பதையும் சுட்டிக்காட்டியது. நிதி நடவடிக்கை பணிக்குழுவின் பணமோசடி தடுப்பு மற்றும் பயங்கரவாத நிதியுதவி விதிமுறைகளை மீறும் பாகிஸ்தானின் நடவடிக்கைள் குறித்தும் ஒரு ஆவணத்தை இந்தியா தயாரித்தது.
கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி நடந்த ஆசிய பசிபிக் குழு கூட்டத்திலும், கடந்த அக்டோபர் 20ம் தேதி நடந்த நடைபெறும் நிதி நடவடிக்கை பணிக்குழுவின் கூட்டத்திலும் அந்த ஆவணத்தை இந்தியா சமர்ப்பித்தது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பிரான்சில் செய்தியாளர்களைச் சந்தித்த நிதி நடவடிக்கை பணிக்குழு தலைவர் (Elisa de Anda Madrazo) எலிசா டி அண்டா மட்ராசோ, சாம்பல் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்கியது, பயங்கரவாத நிதியுதவி மற்றும் பணமோசடி செய்வதற்கான உரிமம் என்று எடுத்துக் கொள்ள முடியாது என்று எச்சரித்துள்ளார்.
மேலும், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். ஏற்கெனவே பாகிஸ்தானில் அமைந்துள்ள ஜெய்ஷ் இ முகமது (JeM) போன்ற பயங்கரவாத அமைப்புக்கள் மீண்டும் நிதி திரட்டத் தொடங்கியுள்ளன. பயங்கரவாத பயிற்சி முகாம்களுக்கு நிதியளிப்பதற்காக அவர்கள் டிஜிட்டல் பணப் பரிமாற்றத் தளங்கள் மற்றும் electronic wallets மூலம் நிதி திரட்டுவதாக பல்வேறு ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், நிதி நடவடிக்கை பணிக்குழுவின் கடுமையான எச்சரிக்கை, சர்வதேச நாடுகள் பாகிஸ்தானை பயங்கரவாத நாடாகவே பார்க்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது. தொடர்ந்து பயங்கரவாதத்துக்கு ஆதரவாகச் செயல்படும் பாகிஸ்தான் சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
















