இந்தியாவுடனான போரில் பாகிஸ்தான் எப்போதும் வெற்றிபெற முடியாது என்றும், இந்தியா மீது பாகிஸ்தான் நடத்தும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் பாகிஸ்தானுக்கே ஆபத்தாக முடியும் என்றும் அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான CIA -வின் முன்னாள் அதிகாரி ஜான் கிரியாகோ தெரிவித்துள்ளார். அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பாகிஸ்தானில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் தலைவராகவும், CIA வில் 15 ஆண்டுகள் பணியாயற்றிய முன்னாள் அதிகாரி ஜான் கிரியாகோ ஒரு நேர்காணலில், இந்தியாவுடனான போரில் பாகிஸ்தான் எப்போதும் வெற்றிபெற முடியாது என்று தெரிவித்துள்ளார்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் இந்தியாவை தூண்டி விடுவது, பாகிஸ்தானுக்கே ஆபத்தாக முடியும் என்றும் கூறியுள்ளார். குறிப்பாகப் பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒரு போதும் பணியாது என்றும், எந்த ஒரு பயங்கரவாத செயலுக்கும் இந்தியா உடனடியாகப் பதிலடி கொடுக்கும் என்றும் கூறியுள்ள ஜான் கிரியாகோ, 2016-ல் இந்தியா நடத்திய சர்ஜிக்கல் ஸ்ட்ரைக், 2019-ல் பாலகோட் தாக்குதல், மற்றும் ஆப்ரேஷன் சிந்தூர் ஆகிய தாக்குதல்களைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
2001 நாடாளுமன்றத் தாக்குதல் மற்றும் 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுக்கும் என்று அமெரிக்கா எதிர்பார்த்ததாகவும், திருப்பித் தாக்கும் உரிமை பெற்றிருந்தும் இந்தியா, பாகிஸ்தானைத் தாக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பின் ஆட்சியில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா மில்லியன் கணக்கான டாலர்கள் நிதிஉதவி வழங்கியதாகவும் அதற்குப் பிரதிபலனாகப் பாகிஸ்தானின் அணு ஆயுதக் களஞ்சியத்தின் முழுக் கட்டுப்பாட்டையும் முஷாரப் அமெரிக்காவிடம் ஒப்படைத்ததாகவும் விவரித்துள்ளார்.
இராணுவத்தையும், பயங்கரவாதிகளையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க, பயங்கர வாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பதாக நடித்துக் கொண்டு, இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளை முஷாரப் அனுமதித்துக் கொண்டிருந்ததாகவும், அமெரிக்க என்ன செய்ய விரும்புகிறோமோ அதைச் செய்ய அனுமதித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சவூதி அரேபியாவின் வேண்டுகோளுக்கு இணங்கவே, பாகிஸ்தானின் பிரபல அணுசக்தி விஞ்ஞானியான ஏ.கே.கானை அமெரிக்கா கொல்லாமல் விட்டதாகக் கூறியுள்ள ஜான் கிரியாகோ, தற்போது, சீனா மற்றும் இந்தியாவுடன் சவூதி அரேபியா நல்லுறவை வளர்த்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
வட கொரியா, ஈரான் மற்றும் லிபியா போன்ற நாடுகளுக்கு அணுசக்தி தொழில்நுட்பத்தை வழங்கியதால், உலகின் மிகவும் முக்கியமான அணுசக்தி கடத்தல்காரர்களில் ஒருவர் ஏ.கே. கான் குறிப்பிடப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 2007ம் ஆண்டு, சித்திரவதை திட்டங்களை பகிரங்கமாக உறுதிப்படுத்திய முதல் CIA அதிகாரி என்பதுடன், ரகசிய தகவல்களை வெளியிட்ட காரணத்துக்காக சிறையில் அடைக்கப்பட்ட முதல் CIA அதிகாரி ஜான் கிரியாகோ என்பதும் குறிப்பிடத்தக்கது.
















