தென்கிழக்கு வங்ககடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கணிக்கப்பட்ட நேரத்தை விட முன்பே புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறும் எனவும் இதற்கு மோன்தா புயல் என பெயரிடப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் இன்று மாலையே புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் மீண்டும் அறிவித்துள்ளது,
இந்த அறிவிப்பில் அந்தமான் தீவுகளின் மேற்கு – தென் மேற்கே 620 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து கிழக்கு – தென் கிழக்கு பகுதிகளில் 780 கிலோ மீட்டர் தொலைவிலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த புயல் சின்னம் அக்டோபர் 28ம் தேதி மசூலிப்பட்டினத்திற்கும் கலிங்கப்பட்டினத்திற்கும் இடையே கரையை கடக்க கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
















