இந்திய பங்குச் சந்தையைச் சீர்குலைக்க காங்கிரஸ் கட்சி முயற்சிப்பது ஏன்? எனப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்காவிலிருந்து வெளியாகும் தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் கட்டுரையில், எல்ஐசி நிறுவனம் அதானி குழும நிறுவனத்தில் சுமார் 34 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ததில் டீப் ஸ்டேட் எனப்படும் சக்தி வாய்ந்த வெளியாட்களின் தலையீடு உள்ளது எனக் கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, எல்ஐசி மூலம் அதானியை மத்திய அரசு பாதுகாப்பதாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் மல்லிகார்ஜுனேவுக்கு பதிலளித்து பதிவிட்டுள்ள அண்ணாமலை, முதலீட்டு முடிவுகளில் நிதிச்சேவைகள் துறை ஈடுபடவில்லை என்பதை எல்ஐசி ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது எனக் கூறியுள்ளார்.
2013-14 ஆம் ஆண்டில் எல்ஐசியின் மொத்த பங்கு மூலதனம் 2 லட்சத்து 55 ஆயிரம் கோடியாக இருந்தது எனவும், இது 2024-25 ஆம் ஆண்டில் 13 லட்சத்து ஆயிரத்து 656 கோடியாக வளர்ந்தது எனத் தெரிவித்துள்ள அண்ணாமலை, அதானி நிறுவனத்தில் எல்ஐசி மேற்கொண்டுள்ள முதலீடுகள் அதன் மொத்த பங்குகளில் 4.5% மட்டுமே எனவும் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், காங்கிரஸ் கட்சி நிதி நேர்மை குறித்து பேசுவது பிக்பாக்கெட் திருடன் பணப்பையை பாதுகாப்பதை குறித்து கற்பிப்பதை போன்றது எனவும் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
















