பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது தெஹ்ரீக்-இ-தாலிபான் அமைப்பு.. பல பழங்குடி கிராமப் பகுதிகளை கைப்பற்றியுள்ள அந்த அமைப்பினர், பெஷாவரை நோக்கி நகர்ந்து வருவது, இருநாடுகளுக்கு இடையேயான பதற்றத்தை மீண்டும் பற்ற வைத்துள்ளது.
பாகிஸ்தானின் பரந்து விரிந்த கைபர் பக்துங்க்வா மகாணம், தெஹ்ரீக்-இ-தாலிபான் மற்றும் அதன் கூட்டணி கிளர்ச்சிக்குழுவின் கைகளுக்குச் சென்றிருப்பதால், பாகிஸ்தான் ராணுவம் உள்நாட்டில் கடும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளது. உளவுத்துறை தகவல்கள்படி, கிளர்ச்சியாளர்களின் வலையமைப்பு, துராந்த் கோட்டில் உள்ள பழங்குடிகளின் பெரும் பகுதியைக் கைப்பற்றியதோடு, பாகிஸ்தான் ராணுவம் நுழையத் தடை செய்யப்பட்ட பகுதியாகவும் மாற்றியுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில், கைபர், குர்ராம், வடக்கு மற்றும் தெற்கு வசிரிஸ்தான் மற்றும் பாஜாவூர் போன்றவை பதற்றமான மாவட்டங்களாக உள்ளன. அங்குத் தாலிபான்களுடன் இணைந்த குழுக்கள், தங்களது கட்டுப்பாட்டை அதிகாரத்தைப் பலப்படுத்தியிருப்பது பாகிஸ்தானுக்கு கடும் சவாலாக மாறியுள்ளது. பெஷாவர் – கைபர் சாலை, ஹங்கு-குர்ராம் வழித்தடம், வசிரிஸ்தான் நோக்கிச் செல்லும் பன்னு-தேரா இஸ்மாயின் கான் பகுதி போன்ற முக்கிய பாதைகளைத் தங்களது.
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள தெஹ்ரீக்-இ-தாலிபான் அமைப்பு, அங்கு வெளிப்படையாகவே சோதனைச் சாவடிகளை அமைத்திருப்பதாக வரும் தகவல்கள் உண்மையிலேயே பாகிஸ்தானுக்கு தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது… ஆயுதங்களுடன் ரோந்தில் இருக்கும் போராளிகள், வாகனங்களை நிறுத்துவது, அடையாள அட்டைகளை ஆய்வு செய்வது, ஜிஹாத் என்ற பெயரில் வலுக்கட்டாயமாக நிதியை வசூலிப்பது போன்ற நடவடிக்கைகள் பாகிஸ்தானை தடுமாற செய்துள்ளது.
கைபர் பக்துங்க்வா பகுதியில் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் வகையில், தெஹ்ரீக்-இ-தாலிபான் ஊடகப்பிரிவு, போராளிகள் நெடுஞ்சாலைகளில் ரோந்து செல்வதையும், பொதுமக்களைத் தொடர்பு கொள்வதையும் காட்டும் வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன.. இது பாகிஸ்தானுக்கு சொந்தமான எல்லை மாகாணங்கள் பேராளிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது.
கிராமப்புற பழங்குடி மண்டலங்களிலிருந்து பெஷாவர் நகர்ப்புற எல்லையை நோக்கித் தங்களது செல்வாக்கை அதிகரிப்பதே TTP-யின் அண்மைக்கால உத்தியாகப் பார்க்கப்படுகிறது. முன்னதாக எல்லைப்படை, உள்ளூர் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்த, படாபர், மட்டானி, பாரா கோரியார்டகளை, தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருப்பதாகப் போராளிக்குழுக்கள் கூறுகின்றன. அங்குப் போராளிக்குழுக்கள் தங்களது படைகளை நகர்த்துவதோடு, பாதுகாப்புக்கான பணத்தை சேமிப்பதாகவும், மாகாண தலைநகரிலிருந்து தாக்கும் தூரத்திற்குள் ஆயுதங்களைச் சேமித்து வைப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், இதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் பாகிஸ்தான் மவுனம் காத்து வருகிறது. இது தீர்க்கமான எதிர் நடவடிக்கைகளைத் தொடங்குவதற்குப் பதிலாகக் கட்டுப்பாட்டு அணுகுமுறையை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளியுள்ளது.
பாகிஸ்தானின் தற்போது இக்கட்டான நிலைக்கும், 2021ம் ஆண்டு முன்னர், தாலிபான்கள் படிப்படியாக ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதற்கும் இடையே பல ஒற்றுமைகளை உள்ளதாகப் பாதுகாப்பு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சோதனை சாவடிகள், பிரசார துண்டுபிரசுரங்கள் மற்றும் நிதி திரட்டும் நடவடிக்கை என TTP-யின் எழுச்சியானது, போராளிக்குழுக்களுக்கும், அரசு நிர்வாகத்திற்கும் இடையிலான கோட்டை மங்கலாக்கியுள்ளது. பாகிஸ்தான் விரைவில் கட்டுப்பாட்டை மீட்காவிட்டால், விரைவில் சரிவைச் சந்திக்கும் என்பது ஆய்வாளர்களின் எச்சரிக்கையாக உள்ளது.
















