வந்தே மாதரம் தேசிய பாடல் இயற்றப்பட்டதன் 150ஆவது ஆண்டு விழாவை நாட்டு மக்கள் வெகுசிறப்பாகக் கொண்டாட வேண்டும் எனப் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
பிரதமர் மோடி மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் பொதுமக்களிடையே உரையாற்றி வருகிறார்.
அந்த வகையில், 127வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய அவர், நவம்பர் 7ஆம் தேதி வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டதன் 150வது ஆண்டு உற்சவத்தில் நுழையவுள்ளதாகவும், 19ம் நுாற்றாண்டைச் சேர்ந்த இந்தத் தேசப்பக்தி பாடல் இன்றும் நம் தேசிய உணர்வுகளை தட்டியெழுப்பும் வகையில் உள்ளது எனவும் கூறியுள்ளார்.
வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு உற்சவத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாகவும், அதனை நாட்டு மக்கள் அனைவரும் உற்சாகமாகக் கொண்டாட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
ஒரு காலத்தில் வழக்கு மொழியாக இருந்த சமஸ்கிருதம், சுதந்திரத்திற்கு பின் துரதிர்ஷ்டவசமாகப் புறக்கணிப்புக்குள்ளானது எனக்கூறிய பிரதமர் மோடி, தற்போது சமூக ஊடகங்கள் வழியாகச் சமஸ்கிருதம் புத்துயிர் பெற்று வருகிறது எனத் தெரிவித்தார்.
மேலும், தமிழக எல்லையோர நீலகிரி மலையில் உற்பத்தியாகும் காபிக்கு சர்வதேச அளவில் தனி இடம் கிடைத்துள்ளது என்றும், கேரளாவின் வயநாடு, திருவிதாங்கூர், மலபார் பகுதிகளில் விளையும் காபிகளுக்கும் தனி மவுசு உள்ளது எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
















