ஆப்கான் எல்லையில் மீண்டும் வெடித்த மோதலில் பாகிஸ்தான் வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது.
ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்துவரும் தலிபான்கள் இருநாட்டு எல்லையில் கிளை அமைப்பைத் தொடங்கி பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாகப் பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வருகிறது.
தெஹ்ரீக் இ தலிபான் என்ற அமைப்பு பாகிஸ்தானில் தாக்குதல் நடத்துவதாகப் பாகிஸ்தான் தெரிவிக்கிறது. இதனிடையே, பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே சமீபத்தில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் பலர் உயிரிழந்தனர்.
பின்னர், கத்தாரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சண்டையை நிறுத்த இருதரப்பும் ஒப்புக்கொண்டன. இதன் பின்னரும் அசாதாரண சூழல் நிலவுவதால், துருக்கியில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் இதுவரை உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்நிலையில், பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லையில் மீண்டும் மோதல் வெடித்தது. இந்த மோதலில் பாகிஸ்தான் பாதுகாப்புப்படை வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.
அதேவேளை, ஆப்கானிஸ்தானிலிருந்து பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்குள் நுழைய முயன்றதாகவும் அப்போது நடந்த மோதலில் 25 பயங்கரவாதிகளைச் சுட்டுக்கொன்றதாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த மோதலால் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
















